இலங்கையில் முஸ்லிம்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் வன்முறை தொடர்பில் தலையிடுமாறு கனேடிய பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவில் வாழும் முஸ்லிம் மக்கள் எழுத்து மூலமாக, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையில் சிறுபான்மையினர் மீண்டும் ஒரு நெருக்கடியை எதிர்கொள்வதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கனேடிய பிரதமர் தனது அலுவலகத்தின் ஊடாக தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்த வேண்டும் என்று புலம்பெயர்ந்தோர் வலியுறுத்தியுள்ளனர்.
“மீண்டும் மீண்டும் சிறுபான்மை சமூகங்கள் தொடர்ச்சியான அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அந்த தாக்குதல்கள் தீவிரமான பெளத்த பிக்குகள் மற்றும் இனவாத குழுக்களினால் நிகழ்த்தப்பட்டவை, இது முக்கியமான மற்றும் தாங்க முடியாத ஒரு புள்ளியை அடைந்துள்ளது.
இந்த குழுக்கள் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ வழிபாட்டு தலங்கள், தொழில்கள் செய்யும் இடங்கள் மற்றும் வீடுகளை இலக்கு வைத்து தாக்குகின்றனர்.
1983 ஆம் ஆண்டில் இந்து மற்றும் கிறிஸ்தவத் தமிழர்களை இலக்கு வைத்து கலவர சூழலை உருவாக்கப்பட்டது. தற்போது அதற்கு ஒத்த வகையில், பெரும் வன்முறையை கட்டவிழ்த்து விடுவார்கள் என்று நாங்கள் அஞ்சுகிறோம்.
உண்மையில், அதே குழுக்கள் 2014ஆம் ஆண்டு ஜுன் மாதம் தெற்கு புறநகர் பகுதியான அளுத்கமவில் முஸ்லிம் சமூகத்தின் மீது வன்முறைத் தாக்குதல்களை நடத்தினர். இதனால் உயிரிழப்புக்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் சொத்துக்களுக்கு பாரியளவில் சேதங்கள் ஏற்பட்டிருந்தாக, கனேடிய பிரதமருக்கான கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.