கடந்தகாலப் பிரச்சினைகளின் அசாதாரண நிலை மட்டுமல்ல, அதற்குப் பின்னரான காலப்பகுதிகளிலும் த.தே.கூட்டமைப்பிற்குள் இருக்கக்கூடிய கட்சி முறுகல் நிலைமைகள் பிரதேச வேறுபாடுகள், சாதி வேறுபாடுகள் என்பவற்றை வைத்து அரசியல் செய்ய ஆரம்பிப்போமாகவிருந்தால் தமிழ் மக்களது தீர்வுத்திட்டத்தினது எதிர்காலம் வேறு திசைக்கு மாற்றப்படும். இன்று வடமாகாணசபையில் எழுந்துள்ள பிரச்சினையின் அடிப்படையில் சிங்களதேசம் கூறும் விடயம் என்னவெனில் வடமாகாணசபையின் நிர்வாகத்தையே ஒழுங்காக கொண்டுசெல்லமுடியாத இவர்கள் எவ்வாறு வடக்கு-கிழக்கினை இணைத்து தமிழ்-முஸ்லீம் உறவுமுறையைப் பேணி சமாதானப் பாதையில் பயணிக்கப்போகிறார்கள் என்பதேயாகும்.
தென்னிலங்கை அரசியலைப் பொறுத்தவரை தமிழ் மக்களுக்கான விடுதலைப்போராட்டத்தை ஒட்டுமொத்தத்தில் சின்னாபின்னமாக்குவதற்கு தமிழ்த்தரப்பினைப் பயன்படுத்தி அதில் அரசு வெற்றி கண்டது. குறிப்பாக அக்காலகட்டத்திலிருந்து பார்த்தால் அல்பிரட் துரையப்பா முதல் கருணா அம்மான் வரை தமிழினக் காட்டிக்கொடுப்புக்கள் இடம்பெற்று வந்தது. இதில் குறிப்பாக ஆயுதக்கட்சிகளாக ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈ.பி.டி.பி போன்ற கட்சிகளும் உள்ளடக்கப்படும். இவர்களும் துரோகச்செயல்களில் ஈடுபட்டனர்.
விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில்தான் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்கிற அமைப்பு கொண்டுவரப்பட்டது. ஆனால் இதுவரை உத்தியோகபூர்வமாக பதிவுசெய்யப்படவில்லை. அவ்வாறு பதிவுசெய்தால் அது இலங்கையரசிற்கும் ஆபத்தாக அமையும். அதனால்தான் பிரித்தாளும் தன்மையைக்கொண்டு அரசு வழங்கும் சலுகைகளை மாத்திரம் பெற்றுக்கொண்டு அமைச்சுப் பதவிகளையும், பாராளுமன்ற உறுப்புரிமையைப் பெற்று தேசியம், சுயநிர்ணய உரிமை என்பதிலிருந்து தமிழினம் விலகிப் பயணிக்கவேண்டும் என அரசு விரும்புகிறது.
30 வருட காலப் போராட்டமாக இரு;தாலும் சரி, அதற்கு முன்னதாக இருந்தாலும் சரி காலங்காலமாக சிங்கள அரசினால் திட்டமிடப்பட்டு பிளவுகள் தமிழினத்திற்குள் முன்னெடுக்கப்படுகிறது. தற்போது வீராப்பு பேசிக்கொண்டிருக்கும் ஆயுதக்கட்சிகள் தாம் தான் தமிழ் மக்களை மீட்க வந்த தூதர்கள் என கட்சிகளுக்குள் முரண்பாடுகளையும், இனக்கலவரம் மற்றும் ஜாதி முரண்பாடுகளைத் தூண்டிவிடுகின்றனர். இவ்வாறு செய்கின்றவர்கள் தமிழரசுக் கட்சியின் பதிவிலிருந்தே வருகின்றனர. இதிலிருந்து இந்த ஆயுதக்கட்சிகள் விலகிச் செயற்பட ஆரம்பிக்கவேண்டும். வெறுமனே ஆசனத்திற்காக சண்டை போடக்கூடாது. ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் அவர்கள் பாரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முனைந்தார். நாம் ஒற்றுமையாக செயற்படுகின்றறோம் என்றும் தமக்கான ஆசனத்தைப் பெற்றுக்கொண்டு அவரும் பல்டி அடித்தார்.
இதில் தமிழ் மக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். மக்கள் பிரதிநிகள் எனக்கூறிக்கொண்டு மக்களின் வளமான வாழ்வினைக் கருத்திற்குகொண்டு இவர்கள் செயற்படுவதில்லை. விடுதலைப்புலிகளால் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தான் செயற்படவேண்டும். அப்போது த.தே.கூவின் தலைவராக சம்பந்தன் அவர்கள் நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் தற்போது விடுதலைப்புலிகளால் தான் நியமிக்கப்படவில்லை எனக்கூறுவது முற்றுமுழுதான பொய்யாகும்.
த.தே.கூட்டமைப்பு விடுதலைப்புலிகளால் உருவாக்கப்படும்போது, தற்போது விடுதலைப்புலிகளை விட்டுச்சென்ற கருணா அவர்களும் புகழேந்தி, தமிழ்ச்செல்வன், ஈரோஸ் பாலகுமார் போன்றவர்களும் அதில் பிரசன்னம் ஆகியிருந்தனர். குறித்த சில ஊடகவியலாளர்களும் கூட அதில் பங்குபற்றியிருந்தனர். ஆனால் தற்போது இவர்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
காலத்தின் தேவைகருதி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை சிதைவுபடுத்தும் நோக்கோடு அரசு செயற்படுகிறது என்பதுதான் உண்மை. அத்தகைய செயற்பாட்டை தமிழ் மக்களாகிய நாம் மாற்றியமைக்கவேண்டும். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைமைகள் எனப்பார்க்கின்ற போது நான்கு கட்சிகளும் இணைந்து தலைவர், செயலாளர், பொருளாளர் என உருவாக்கப்படவேண்டும். ஆனால் அவ்வாறன நிலைமைகள் இல்லை. தமிழரசுக்கட்சியினது கட்டளையின் கீழே அனைத்து விடயங்களும் நிறைவேற்றப்படுகின்றது. இதனால் ஏனைய ஆயுதக்கட்சிகள் புறக்கணிக்கப்படுகின்றன. இவ்வாறான கூட்டுப்பொறுப்புடன் ஏன் இந்தக்கட்சிகள் இணைந்து ஒற்றுமையாக விடுதலைப்புலிகளது ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் செயற்படக்கூடாது.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பாக பதிவுசெய்யப்படுகின்றபோது தமிழரசுக்கட்சிக்கு வரக்கூடிய ஆபத்துக்களை அவர்கள் உணர்ந்து அதனைப் பதிவுசெய்யும் விடயத்தில் பின்நோக்கியே நகர்ந்துகொண்டு செல்கின்றனர். தேர்தல்கள் என வருகின்றபோது இப்பதிவு விடயம் பேசுபொருளாக எடுபட்டாலும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு முடியாமல் உள்ளது. அச்சமயத்தில் ஆயுதக்கட்சிகளுக்கு ஆசனப்பதிவே மிக முக்கியமாகத் தேவைப்படுகிறது. இந்தக் காரணத்தால் அவர்கள் தமிழரசுக்கட்சி வழங்குகின்ற ஆசனங்களை ‘பிச்சைபோடுங்கள் சுவாமி’ என்பதுபோலப் பெற்றுக்கொண்டு, வெளியேறிய பின்னர் தமிழரசுக்கட்சிக்கு எதிராக பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர். இவ்வாறான நிலைப்hபடு ஏன் உருவாகவேண்டும். தமிழரசுக்கட்சிதான் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை பதிவுசெய்யத் தடையாக இருக்கின்றது எனக் கருதினால் ஏனைய 03கட்சிகளும் இணைந்து செயற்படுவதில் என்ன பிரச்சினை இருக்கிறது.
தவறு என்பது அனைத்துக்கட்சிகளிலும் இருக்கிறது. கடந்தகாலப் பிழைகளை சுட்டிக்காட்டுவதன் ஊடாகவும், தொடர்ந்து அதனைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பதன் ஊடாகவும் நாம் எதனையும் சாதிக்கமுடியாது. விடுதலைப்புலிகளால் துரோகி என்ற பட்டம் வழங்கப்பட்டு விடுதலைப்புலிகளின் கொலைப்பட்டியலில் இருந்தவர் தான் சம்பந்தன். இவரைக் கரங்கொடுத்துக் காப்பாற்றியது வன்னியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம். சந்திரிக்கா அம்மையாரின் செல்லப்பிள்ளையாகச் செயற்பட்டவர்தான் சம்பந்தன் அவர்கள்.
வடக்கு முதல்வரை எடுத்துக்கொண்டால் சிங்களப் பேரினவாதிகளுடன் இரண்டறக்கலந்தவர். அதாவது வாசுதேவ நாணயக்காரவின் சம்பந்தியாவார். ஆனால் ஆயுதக்கட்சிகள் பல இவரை முதல்வர் வேட்பாளர் தெரிவின்போது எதிர்த்தபோதும், வடமாகாண சபையின் முதல்வராக இவரை கொண்டுவரவேண்டும் என ஒற்றைக்காலில் நின்றவர்கள் சம்பந்தனும், சுமந்திரனும் தான். ஆயுதக்கட்சிகளுடன் இணைந்து நான் பயணிக்கத் தயாராகவில்லை என்றார் முதல்வர். இதனால் ஆயுதக்கட்சிகள் அக்காலத்தில் பல எதிர்ப்புக்களை இவர் மீது வெளியிட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவரது தனிப்பட்ட அரசியல் வாழ்க்கையில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. இனிவரும் காலங்களில் த.தே.கூட்டமைப்பு பதிவுசெய்யப்பட்டு, தமிழ் மக்களது தெரிவுகளால் புதிய தலைவர்கள் உருவாக்கப்படவேண்டும். அவ்வாறான நிலைமைகள் உருவாக்கப்பட்டால்தான் எதிர்காலச் சந்ததியானது நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாகும்.
இதனைவைத்து பலர் அரசியல் செய்ய முற்படுகின்றனர். அவர்கள் மழைக்கு முளைத்த காளான் போன்று தமது செயற்பாடுகளைச் செய்துவருகின்றனர். வடமாகாணசபையானது ஒரு வினைத்திறன் மிக்கச் சபையாக கொண்டுவரப்படவேண்டும். அவ்வாறு கொண்டுவரப்படாவிடின் இதனை அரசு சாதகமாகக்கொண்டு பிற கட்சிகளைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளை ஏற்படுத்தி அதனோடு தங்களது செயற்பாடுகளைச் சாதித்துக்கொள்ளும். வடக்கின் நான்கு அமைச்சர்களையும் காப்பாற்ற முயற்சிப்பது இலட்சக்கணக்கான தமிழ் மக்களது அழிவுப்பாதைக்கு இவர்களே காரணமாகவும் அமைந்துவிடுவார்கள். நிர்வாகம் பார்த்துக்கொள்ளவேண்டிய வேலைகளை மக்கள் கைகளில் எடுக்கவேண்டிய நிலைமைகள் ஏற்படும்.
ஆயுதக்கட்சிகள் குறிப்பாக இதில் அவதானம் செலுத்தவேண்டும். மக்களைத் தூண்டிவிட்டு அதில் குளிர்காயும் செயற்பாடுகளை தவிர்க்கவேண்டும். தமிழரசுக்கட்சி தலைக்கனத்திலிருந்து இறங்கிவரவேண்டும். சம்பந்தனுக்குப் பின் யார்? என்ற நிலைப்பாடு தற்போது நிலவிவருகின்றது.
வடமாகாணசபையிலும் முதலமைச்சர் யார்? என்கிற நிலைப்பாடே தோற்றுவிக்கப்பட்டுள்ளது. முதலாவது தற்போதிருக்கக்கூடிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணவேண்டிய தேவை இருக்கிறது. மாதாந்தம் த.தே.கூட்டமைப்பும், வடமாகாணசபையும் இணைந்து சந்திப்புக்களை ஒழுங்குபடுத்தி கலந்தாலோசிப்பதன் மூலம் இவ்வாறான குழப்பகரமான சூழ்நிலைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் இல்லை. ‘ஆடிக்கு ஒருமுறை அமாவாசைக்கு ஒருமுறை’ என சந்திப்பதன் ஊடாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மற்றும் வடமாகாண சபைக்கும் இடையிலான ஒற்றுமையின்மை அதிகரிக்கின்றதே தவிர வேறொன்றுமில்லை. தேர்தல் காலங்களில் மாத்திரம் ஒற்றுமையினைக் காண்பிப்பதன் ஊடாக எந்தவித பயனும் இல்லை.
தற்போது ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில் மக்கள் பிரதிநிதிகள் த.தே.கூட்டமைப்பை உடைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டால் அவர்களை இனங்கண்டு வீதிக்கு இழுத்துவந்து கல்லெறிந்து கொலைசெய்ய வேண்டும். அவ்வாறான நிலைமையே தற்போது ஏற்பட்டிருக்கிறது. ஊழல் நிறைந்தவர்களாக தமிழ் மக்களைச் சித்தரிக்க அரசாங்கம் எடுத்துக்கொண்ட ஆயுதம் தான் இந்த வடமாகாணசபை விவகாரம்.
கருணா – புலிகள் பிளவின்போது கூட கூட்டமைப்பைப் பிளவுபடுத்த கருணா தீவிரமாக முயற்சிகளைச் செய்தார். ஆனால் அத்தனைத் திட்டங்களும் தவிடுபொடியாக்கப்பட்டது. தற்போதைய ரணிலின் தலைமை அத்தகையதொரு செயற்பாட்டையே முன்னெடுத்துவருகின்றது. குழப்பவாதிகளாகச் செயற்படுகின்றவர்கள் முளையிலேயே கிள்ளியெறியப்படவேண்டும். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஒற்றுமையை பலப்படுத்தி, பதிவுசெய்து ஒழுங்கமைப்புக்கு கூட்டமைப்பைக் கொண்டுவரும்வரை மக்கள் பிரதிநிதிகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அதனை நாம் சரிவரச் செய்யவேண்டும்.
இருக்கக்கூடிய ஆயுதக்கட்சிகளும் இனியாவது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பைப் பதிவு செய்யும் விடயத்தில் ஒற்றுமையாகச் செயற்படவேண்டும். தமிழரசுக்கட்சி பதிவுசெய்ய மறுத்தால் மூன்று கட்சிகளும் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பைப் பதிவு செய்ய அழைப்புவிடுக்கவேண்டும். தமிழரசுக்கட்சியைவிட்டு தனித்து வெளியேவந்து போட்டியிட்டால் தாம் தோற்றுவிடுவோம் என்கிற பயமும் இவர்களுக்கு இருக்கிறது.
என்னதான் நடந்தாலும் தனது காரியத்தில் கண்ணாக இருப்பவர் தான் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள். தனது தலைமையில் கூட்டமைப்பு பதிவு செய்யப்படவேண்டும் என்பதில் அவர் குறிக்கோளாக இருக்கிறார். இவ்விடயத்தில் சம்பந்தனும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஒன்றுதான்.
ஆகவே இனிவரும் காலங்களிலாவது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பைப் பதிவுசெய்து, சிறந்த தலைமையினை உருவாக்கி, தமிழ் மக்களது எதிர்காலம் சிறந்தமுறையில் அமைய சாதி, மத, இன பேதங்களை மறந்து ஒற்றுமையாக அனைவரும் செயற்படுவோம்.
– நெற்றிப்பொறியன்