நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் 17ம் தேதி, கேரள மாநிலம் கொச்சியில் காரில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு மர்ம கும்பலால் வழி மறித்து கடத்தப்பட்டார். காரிலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு பாவனா உள்ளானார்.
இருப்பினும் இதுகுறித்து பாவனா துணிச்சலாக பொலிசில் புகார் அளித்தார். சம்பவம் குறித்து அறிந்ததும் கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காவல்துறை இந்த வழக்கை சவாலாக எடுத்து விசாரித்தது. இதையடுத்து, அடுத்த ஓரிரு நாளில், குற்றச்செயல் நடந்த காரின் டிரைவர் மார்ட்டின் அந்தோணி கைது செய்யப்பட்டு அவர் கொடுத்த தகவலின்பேரில் பல்சர் சுனில் உட்பட கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், வழக்குதொடர்பாக நடிகர் திலீப் நேற்று கைது செய்யப்பட்டார். நடிகை பாவனாவை கடத்துவதற்கும், பாலியல் பலாத்காரம் செய்வதற்கும் சதித்திட்டம் தீட்டியதற்காக அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் கூறி வருகின்றனர்.
திலீப்புக்கு பாவனா மீது ஏன் இந்த வன்மம் என்பது குறித்து பொலிஸ் தரப்பில் கூறியதாவது: திலீப், அவருடைய முதல் மனைவி நடிகை மஞ்சு வாரியர், நடிகை பாவனா ஆகியோர் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தனர். ஆனால், திருமணமான காவ்யா மாதவன் மீது திலீப்புக்கு மோகம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்தனர். இதை அறிந்த பாவனா, தனது தோழி மஞ்சு வாரியரிடம் அதுகுறித்து தெரிவித்தார்.
மஞ்சு வாரியரும், திலீப்பிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பினார். இதனால் கணவன்-மனைவியிடையே தகராறு மூண்டது. சண்டை அதிகமானதால், மஞ்சு வாரியரை விவாகரத்து செய்த திலீப், காவ்யா மாதவனை 2வது திருமணம் செய்து கொண்டார். மேலும், கூட்டாக ரியல் எஸ்டேட் வர்த்தகம் செய்தபோது வாங்கிய சில நிலங் களை பெயர் மாற்றம் செய்ய கையெழுத்து போடுமாறு திலீப், பாவனாவிடம் வற்புறுத்தினார். அவரோ அதற்ககு மறுத்து விட்டதாக தெரிகிறது.
இதற்கிடையேதான், பாவனாவுக்கு திருமணம் நிச்சயம் ஆனது. தனது திருமண வாழ்க்கையை பந்தாடியது பாவனா என்று, கோபமடைந்த திலீப், பாவனாவின் திருமணத்தை கெடுக்கும் நோக்கத்தில், பாவனாவை பாலியல் தொல்லை செய்து, அந்த வீடியோவை அவருடைய வருங்கால கணவருக்கு அனுப்பி வைக்க பல்சர் சுனிலுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டப்பட்டதாம். இதற்கான ஆதகாரங்கள் கிடைத்துள்ளதால்தான் திலீப் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.