கனடாவில் உள்ள Prairies நதியில் விழுந்து தமிழ் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
அவரைத் தேடும் பணியில் Montreal பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அனோஷன் நாகேஸ்வரா என்ற 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் இளைஞனை கண்டுபிடிக்க முடியவில்லை என நேற்று மாலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று 4 மணித்தியாலங்கள் நிறுத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கை இன்று மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேடுதல் நடவடிக்கைகளுக்காக ஹெலிகப்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மொன்றியாலுக்கு மேற்கே Pierrefonds என்னும் இடத்தில் உள்ள ஆற்றிற்கு அருகே நின்று போட்டோ எடுத்துக் கொண்டிருந்த போது கால் தவறி ஆற்றிற்குள் வீழ்ந்தார். எனினும் அவரை காப்பாற்ற உடன் சென்ற தோழியால் முடியவில்லை.
சமீபத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நீர்மட்டம் அதிகமாக இருந்த ஆற்றில் சுழியும், நீரோட்டமும் அதிகமாக இருந்ததால் அனோஷன் நீரினால் அடித்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அனோஷன் நாகேஸ்வராவுக்கு ஏற்பட்ட நிலை கண்டு அவரது உறவினர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.