நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம்! சித்தார்த்தன் கடும் கண்டனம்

264

யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை புளொட் அமைப்பின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நீதிபதி இளஞ்செழியன் மிக நீண்ட காலமாக எனக்கு நன்கு பரீட்சயமானவர். அவர் வவுனியாவில் அதியுச்ச யுத்த காலத்திலும் மிகத் துணிவாகவும், நேர்மையாகவும் தன்னுடைய நீதிச் சேவையினை ஆற்றி வந்ததை நாங்கள் பார்த்திருக்கின்றோம்.

எந்தவிதமான அரசியல் கலப்பும், பக்கச்சார்பும் இன்றி மிகவும் நேர்மையான முறையிலே அவர் செயற்பட்டு வந்திருக்கின்றார். யாழ்ப்பாணத்திலே மிகவும் பாரதூரமான, உயிர் அச்சுறுத்தல் மிக்க வழக்குகள் பலவற்றை அவர் நேர்மையாக கையாண்டிருக்கின்றார்.

இத்தகைய துணிவும் நேர்மையுமுள்ள நீதிபதி இளஞ்செழியன் எங்களுடைய பகுதிக்கு இன்று மிக அத்தியாவசியமான நீதியை வழங்குபவராகவும், நீதியைப் பாதுகாப்பவராகவும் பார்க்கப்படுகின்றார்.

குற்றச்செயல்கள் மற்றும் வன்முறைகள் அதிகமாகவுள்ள எங்களுடைய பகுதியிலே இவ்வாறான நேர்மையான, பக்கச்சார்பற்ற ஒரு நீதிபதியின் சேவை மிகவும் அவசியமாகும்.

இப்படியான குற்றச்செயல்கள் எதிர்காலத்திலும் தொடராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது பாதுகாப்புத் தரப்பினருடைய கடமையாகும். இதனை அவர்கள் செவ்வனே செய்ய வேண்டுமென நாம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம்.

இளஞ்செழியன் மீதான தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்தச் சம்பவத்தில் கொலையுண்ட சார்ஜண்ட் ஹேமச்சந்திரவின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE