மாலபே தனியார் வைத்திய கல்லூரியை பொதுவுடமையாக்குமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த போராட்டம் இன்றைய தினம் காலை 8 மணிமுதல் இடம்பெற்று வருகின்றது.
நாட்டின் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலபே தனியார் வைத்திய கல்லூரியை அரசுடமையாக்குமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர்ச்சியாக கடந்த மாதம் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்திருந்தது.
எனினும், இம்மாத ஆரம்பத்தில் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்வதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்த போது நாட்டில் டெங்கு நோய் தீவிரமடைந்துள்ளதால் பேராயர் மெல்கம் ரஞ்சித் உள்ளிட்ட பலர் பணிப்பகிஷ்கரிப்பை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதற்கமைய போராட்டம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்றை தினம் மீண்டும் கொழும்பில் கூடிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழுக் கூட்டத்தில் தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்க முடிவு செய்துள்ளனர்.
இதேவேளை, இன்றைய தினம் காலை 8.00 மணி தொடக்கம் நாளை காலை 8.00மணி வரை 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதன்காரணமாக நோயாளர்கள் பாரிய சிக்கல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
மலையகத்தில் வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் நோயாளர்கள் சிரமம்
மலையகத்தில் உள்ள சில வைத்தியசாலைகளில் இன்று சில வைத்தியர்கள் கடமையில் ஈடுப்பட்டிருந்தாலும், சில வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இதனால் சிகிச்சைகளுக்காக வருகை தந்த பொதுமக்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் வீடு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அதேவேளை தாதிமார்களால் வைத்திய கடமை மேற்கொள்ளப்பட்ட போதும் தூர பிரதேசங்களிலிருந்து வருகை தந்த தோட்டத் தொழிலாளர்கள் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்திருந்தனர்.
மேலும், வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் சேவைகள் முழுமையாக செயலிழந்து காணப்பட்டதால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.