
காணாமல்போயுள்ள 5 ஆயிரத்து 101 இராணுவத்தினர் தொடர்பிலும் காணாமல்போனோர் தொடர்பான பணியகம் அவதானம் செலுத்தும் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
சர்வதேச ரீதியில் செயற்படும் பல மனித உரிமை அமைப்புகள் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் காணாமல்போனோர் தொடர்பில் கேள்வி எழுப்பி வருகின்றன.
இந்த நிலையில், இராணுவத்தின் கௌரவத்தை பாதுகாக்கும் நோக்கில் காணாமல்போனோர் தொடர்பான பணியகம் உருவாக்கப்படவுள்ளது.
காணாமல் போயுள்ள 5 ஆயிரத்து 101 இராணுவத்தினர் தொடர்பிலும் இந்தப் பணியகம் ஊடாக அவதானம் செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அலுவலகமானது காணாமல் போனவர்களை தேடி கண்டுபிடிக்கவும், அவர்கள் காணாமல் போனமைக்கான காரணங்களை அறியவும் செயற்படும்.
மேலும், அவர்களது உறவினர்கள் யதார்த்த ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் முகம் கொடுத்துள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கவுமே உருவாக்கப்படுகிறது.
குறித்த செயற்பாடுகளின் போது குற்றவாளிகளுக்கு எதிரான ஆதாரங்கள் கிடைக்குமாயின், பலவந்தமாக காணாமல் போதலுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க யாருக்கும் உரிமை உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில், காணாமல்போனோர் பணியகம் தொடர்பான போலியான அச்சம் ஏற்படுத்தப்படக்கூடாது என்று அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.