
மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் பெற்றுக் கொண்ட கடன்களை மீளச் செலுத்த 2019ம் ஆண்டு 3.2 ட்ரில்லியன் ரூபா தேவைப்படுவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வெளிநாட்டுச் செலாவணி சட்டமூலம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் பதவியேற்ற பின்னர், சர்வதேச அரங்கிலிருந்து மனித உரிமைப் பிரச்சினை, பாரிய கடன்சுமை, ஊழல் மோசடி, குப்பைப் பிரச்சினை என பல்வேறு குப்பைமேடுகளை சுமக்க வேண்டி ஏற்பட்டது.
கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் எவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்ற குற்றச்சாட்டு காணப்படுகிறது.
இந்நிலையில், ராஜபக்ச குடும்பத்தில் வீடு வாங்கியமை, கறுப்புப் பணப் புழக்கமென 3.1 பில்லியன் ரூபா பெறுமதியான மோசடி குறித்த தகவல்கள் நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. எனினும் வெளிநாட்டில் மறைத்து வைக்கப்பட்ட நிதி தொடர்பான விபரங்களைப் பெறமுடியாதுள்ளது.
நாட்டின் கடன்சுமைகளுக்காக இந்த வருடத்தில் அரசாங்கம் 2085 மில்லியன் டொலர்களைச் செலுத்தியுள்ளது. இதில் 72 வீதம் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பெறப்பட்ட கடன்களுக்கான கொடுப்பனவாகும்.
2019ம் ஆண்டாகும்போது வருடத்துக்கான கடன் மீள் கொடுப்பனவுக்காக 3.2 ட்ரில்லியன் ரூபா தேவைப்படுகிறது. இதில் 82 வீதமானது கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பெறப்பட்டதாகும். இது வருமானத்தைவிட மூன்று மடங்கு அதிகமானதாகும்.
2020ம் ஆண்டாகும் போது 3752 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டியிருக்கும். 2022ம் ஆண்டு தலையைத் தூக்க முடியதாளவுக்கு கடன்பெறப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் எமது நிதி நிலைமைகளின் பலத்தை அறிந்து உதவி வருகிறது.இவ்வாறான நிலையிலேயே வெளிநாட்டுச் செலாவணியை தாராளமயப்படுத்தும் வகையிலான சட்டத்தை அரசாங்கம் கொண்டுவந்துள்ளது.
இதனூடாக வெளிநாட்டு மூலதன முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டுவர முடியும். இச்சட்டத்தின் மூலம் வரி ஏய்ப்புக்கள் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றத்தை கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.