
கரைச்சி பிரதேச சபையில் வறட்சியால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களுக்கு நீர்த்தாங்கி மூலம் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கரைச்சி பிரதேச சபை செயலாளர் க.கம்சநாதன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரை பெற்றுக் கொள்வதில் பிரதேச சபை பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வட மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டமும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இந்த நிலையில் அப்பகுதி மக்கள் குடிநீர்த் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் நெருக்கடிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே கரைச்சி பிரதேச சபை செயலாளர் க.கம்சநாதன் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
கரைச்சி பிரதேச சபை வறட்சியால் அதிகளவில் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள கிராமங்களுக்கு நீர்த்தாங்கி மூலம் குடிநீர் விநியோகத்தை மேற்கொண்டு வருகின்றது.
அந்தவகையில், செருக்கன் கிராமத்திற்கு இரண்டு நாட்களுக்கு ஒரு தடவையும், ஆனையிறவு, தட்டுவன்கொட்டி, உமையாள்புரம் ஆகிய கிராமங்களுக்கு ஒன்று விட்டு ஒரு நாளும் என நீர் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்காக நாளாந்தம் 24 லீற்றர் நீர் கரைச்சி பிரதேச சபையினதும் மற்றும் கிளிநொச்சி கமநல சேவைகள் திணைக்கள கிணறுகளில் இருந்து பெறப்படுகிறது.
ஆனால், கரைச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட கிணறுகளில் நீர் வெகுவாக வற்றி காணப்படுவதால், மக்களுக்கு விநியோகிப்பதற்கான குடிநீரை பெற்றுக்கொள்வதில் கரைச்சி பிரதேச சபை நெருக்கடிகளை எதிர்கொள்கிறது.
அத்துடன், 4,000 லீற்றர் நீரை பெறுவதற்கு சுமார் 4 மணித்தியாலயங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலையுள்ளதுடன், அதுவும் அலுவலக கிணற்றில் இன்னும் சில நாட்களுக்கு மாத்திரமே நீரை பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தொடர்ச்சியாக நிலவி வரும் வறட்சி நிலையினால் குடிநீர் விநியோகத்திற்கான புதிய நீர் மூலங்களை தேடிச்செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
ஆனால், குடிநீருக்காக கிளிநொச்சியிலிருந்து அதிக தொலைவில் இல்லாத வேறு நீர் மூலங்களை அடையாளம் காண்பது அரிதான விடயம் என்றும் பிரதேச சபை செயலாளர் கம்சநாதன் கூறியுள்ளார்.