டெங்கு நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக வெளிநாட்டுத் தூதரகங்களை நாடும் அரசாங்கம்

200

டெங்கு நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான வைத்திய உபகரணங்களை கொள்வனவு செய்தல் மற்றும் டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சரினதும் சிபாரிசுகளை கவனத்திற்கு கொண்டு வந்து டெங்கு நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான வைத்திய உபகரணங்களை அவசர முறையாக கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன் அடிப்படையில், உள்நாட்டில் கொள்வனவு செய்ய முடியுமான உபகரணங்களை உடனடியாக கொள்வனவு செய்வதற்கும், மிகுதியான உபகரணங்களை வெளிநாடுகளில் உள்ள தூதுவராலயங்களின் ஊடாக கொள்வனவு செய்வதற்கும் தேவையான நடவடிக்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்காக 300 மில்லியன் ரூபா நிதியினை சுகாதார, போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சுக்கு ஒதுக்கி கொடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக கீழ்க்காணும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

  1. தமது அலுவலக சூழலில் டெங்கு நோய் பரவுவதற்கு இடமளிக்காமல் அதனை சுத்தமாக வைத்துக் கொள்வதற்காக திணைக்கள தலைவர்களுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் அவர்களினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையினை தொடர்ந்தும் செயற்படுத்தல்.
  2. பெற்றோர், மாணவர்களை கொண்டு பாடசாலை வளாகத்தில் டெங்கு ஒழிப்பு பணியினை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்தல்.
  3. டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களை இனங்காண்பதற்காக வீட்டுக்கு வீடு சென்று பரிசீலிப்பதற்கு மேல் மாகாண சபையினால் கள பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இச்செயன்முறையினை ஏனைய மாகாண சபைகள் மூலமாகவும் பின்பற்றல்.
  4. டெங்கு ஒழிப்பு முறையின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் வகையில் தகுந்த ஒளி, ஒலி பதிவேடுகளை தயாரித்து, பிரச்சாரப்படுத்துவதற்கு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் மூலம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  5. சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் உதவியுடன் டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இலங்கை இராணுவ வீரர்கள் 2,000 பேருக்கு பயிற்சியளித்தல்.
  6. சுகாதார வைத்திய அதிகாரிகள், உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இணைந்து குறித்த பிரதேசங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை செயற்படுத்தல். முதலான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
SHARE