
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகியதைத் தொடர்ந்து கிழக்கு மாகாண தமிழ் மக்களிடமும், பொதுசிந்தனைவாதிகள், கல்விமான்கள், சமூக ஆர்வலர்கள். என எல்லோரிடமும் பொதுவான கருத்து ஒன்று மேலோங்கிவருவதை அவதானிக்கமுடிகிறது.

தமிழ் கட்சிகள் பிரிந்து பிரிந்து போட்டியிட்டு தமிழர்கள் வாக்கு சின்னாபின்னமாக்கப்படாமல் அனைத்து தமிழ் கட்சிகளும் புரிந்துணர்வுடன் ஒரு அணியில் போட்டியிட்டு கிழக்கு மாகாணசபை ஆட்சிசெய்ய வேண்டும் என்ற எண்ணமும், எந்த கட்சிகளுக்கும் சாராத மக்கள் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சேவை செய்யக்கூடிய ஆளுமைமிக்க தமிழர் ஒருவர் முதலமைச்சராக தெரிவு செய்யப்படவேண்டும் என்ற எதிர்பார்புமே பரவலாக காணப்படுகிறது.
தமிழ் மக்கள் மத்தியில் ஒரு சிறந்த தலைமைத்துவம் இல்லாத ஒரு வெறுமை உணர்வை 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் நோக்கமுடிகிறது இந்த நிலைமை கிழக்கு மாகாணத்தில் ஒரு படி மேலாக உள்ளது என்றே கூறலாம் இந்த ஆதங்கத்தினை மக்களிடத்திலும் அவதானிக்ககூடியதாக உள்ளன
கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் முயற்சியினால் ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் கூட்டாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது யாவரும் அறிந்தவிடயமே, இக்கட்சி சிறந்த கட்டுக்கோப்போடு வழிநடத்தப்பட்டதனால் தமிழ் மக்களின் அமோக ஆதரவும் கிடைத்தன, வடக்கு கிழக்கில் தொடர் வெற்றிகளையும் பெற்றுவந்தன, ஆனால் மக்கள் ஆதரவை, மக்கள் வைத்த நம்பிக்கையை 2009 ஆம் ஆண்டின் பின்னர் அதே நிலையில் தக்க வைத்துக்ககொள்ள தவறியுள்ளதா? எனும் கேள்விகளும் எழுந்வண்ணமே உள்ளன. இந்தக் கேள்விகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக்கட்சிகளுக்கும் மக்களுக்கு பதில் கூறவேண்டி பொறுப்பு உள்ளன.
தற்போது மக்கள் மத்தியில் இக்கட்சிகள் பல்வேறு வகையான விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளதுடன். மக்களிடம் ஆதரவும் சரிந்துவருவதனை உணரமுடிகிறது இவ்விடயத்தினை இங்கு குறிப்பிடுவதன் காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பை குறைசொல்வது நோக்கமல்ல ஆனால் கிழக்கில் எதிர்கொள்ளவிருக்கும் தேர்தலில்; எந்த வகையிலும் தமிழர் வாக்குகள் சொற்பளவும் பிரிபடக்கூடாது என்பதற்காகவும் தமிழர் வாக்குகள் பிரிபடாமல் தமிழர் ஒருவர் இம்முறை முதலமைச்சராக வருவதனை ஒவ்வொருவரும் உறுதிசெய்ய வேண்டியது அவசியம் எனும் மனநிலை அனைவரிடமும் உருவாகியுள்ளதன் வெளிப்பாடே அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரணியில் இணைந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் எனும் கோஷம் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் அறிவிப்பு வெளியானதன் பின்னர் மக்கள் மத்தியில் வலுப்பெற்றுவருவதற்கு காரணமாகும்.
கிழக்கு மாகாணத்தில் 40 வீதம் தமிழர்கள் வாழ்கின்றார்கள் கடந்தமுறை அதிக ஆசனங்களை பெற்ற கட்சியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இருந்தபோதும் முதலமைச்சர் பதவியினை தாங்கள் விட்டுக்கொடுத்திருந்தார்கள் ஆனால் கிழக்கு மாகாணத்தில் தமிழர் பிரதேசத்தில் காணப்படும் பல முக்கிய பிரச்சனைகளுக்கு எந்த விட்டுக்கொடுப்புடனும் தீர்வுகள் காணப்படவில்லை .
உதாரணமாக கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கென தனியான கட்டிடம் உள்ளது, தனி நிருவாகம் இயங்குகிறது ஆனால் அதனை நிரந்தரமாக்கும் முயற்சி கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இழுத்தடிப்பு செய’யப’பட்டு வருவதுடன் பல்வேறு வழிகளில் தடைகளும் போடப்ட்டே வருகின்றன. இவ்வாறு கிழக்கு மாகாண தமிழ் மக்கள் பல விடயங்களில் நெருக்குதல்களை சந்தித்துகொண்டிருக்கின்றார்கள்.
கிழக்கில் விட்டுக்கொடுப்புடனும் மத்தியில் இணக்க அரசியலிலும் ஈடுபடும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்த பொறுப்பையும் செய்துமுடிக்க தவறிவிட்டது என்ற ஆதங்கமும் இம்மக்கள் மத்தியில் காணப்படுகிறது.
எனவே கடந்தமுறை முதலமைச்சர் பதவியினை விட்டுக்கொடுத்தோம் இம்முறை தமிழர் ஒருவர் முதலமைச்சராக வேண்டும் எ;ற நிலைப்பாட்டுடன் உள்ள கிழக்கு மாகாண தமிழ் மக்கள் அனைத்து தமிழ் கட்சிகளும் ஓரணியில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதாகவே மக்கள் கருத்துக்கள் வலுப்பெற்று வருகிறது.
-பாண்டிருப்பு கேதீஸ்-