நடக்கவே முடியாத பெண்..எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப்பிடித்து சாதனை!

252

அபர்ணா பிரபுதேசாய் ஒருநாள் வீட்டில் தவறுதலாக விழுந்தபோதுதான் அந்த சோகம் நிகழ்ந்தது. இனி அபர்ணாவால் தானாக நடக்கவே முடியாது என்ற அளவிற்கு மருத்துவ பரிசோதனைகள் உறுதி செய்தன. “துணையில்லாமல் உங்களால் நடக்க முடியாது”, என மருத்துவர்கள் கூறினர். ஆனால், அதே அபர்ணாதான் தன்னுடைய நம்பிக்கையால் 47-வது வயதில் எவரெஸ்ட் சிகரத்தையே எட்டிப்பிடித்திருக்கிறார் என்பது மகிழ்ச்சி செய்தி.

“பல மாதங்கள் சக்கர நாற்காலியிலேயே நான் என் வாழ்வைக் கடந்தேன். அப்போது தான் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என தோன்றியது”, என்ற அபர்ணாவின் இந்த வார்த்தைகள் தான் அவரை சாதனை மனுஷியாக மாற்றியது.

எந்தவித சிகிச்சையும் அபர்ணா எடுக்கவில்லை. தசையில் வலுவை ஏற்படுத்தும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள அபர்ணாவின் சகோதரர் அறிவுறுத்தினார். அதன்பிறகு, அபர்ணா ஓட்டப்பயிற்சியை மேற்கொண்டார். முதல் மூன்று, நான்கு கிலோமீட்டர் ஓடியபோது இதை நோக்கிதான் தன்னுடைய வாழ்வும் அமைய வேண்டும் என அபர்ணா முடிவு செய்தார்.

2013-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அபர்ணா ஒருமுறை எவரெச்ட் சிகரத்தின் கீழ்பகுதிக்கு சுற்றுலாவாக சென்றிருந்தார். எவரெஸ்ட் சிகரத்தின் அழகும், அவருடைய தன்னம்பிக்கையும் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தை அபர்ணாவிற்குள் தூண்டியது.

வீட்டிற்கு வந்தவுடன் எவரெஸ்ட் சிகரத்தை அடைவதற்காக ஆன்லைன் மூலம் நிதி திரட்ட துவங்கினார். அவருடைய இந்த ஆர்வத்தைப் பார்த்த தோழி ஒருவர், அபர்ணாவிற்கு மலையேறுதலில் நிபுணத்துவம் பெற்ற ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார். அவரிடம் தான் எவரெஸ்ட் சிகரம் ஏற வேண்டும் என்ற கனவு குறித்து கூறினார். ஆனால், அவருக்கோ உள்ளூர நகைப்பு, இவர் எப்படி எவரெஸ்ட் சிகரம் ஏற முடியும் என.

அதன் பிறகு அவர், எவரெஸ்ட் சிகரத்தின் எந்த பகுதியின் உச்சியை அடைய வேண்டும் என ஆய்ந்து கூறுமாறு அபர்ணாவிடம் கூறினார். எவரெஸ்ட் சிகரத்தை ஆராய்ந்தார் அபர்ணா. அதன்பிறகு எவரெஸ்ட் சிகரத்தின் வட உச்சியை அடைய வேண்டும் என முடிவெடுத்தார். பிறகு மலையேறுதலில் அடிப்படை பயிற்சி முதல் மேம்பட்ட பயிற்சிகள் அனைத்தையும் மேற்கொண்டார்.

கடந்த மே 22-ஆம் தேதி எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தார். அப்போது அவருக்கு வயது 47. சக்கர நாற்காலியில் பல மாதங்களை கழித்த அபர்ணா, தன்னுடைய கனவை நோக்கிய தெளிவான பயணத்தால் எவரெஸ்ட் சிகரத்தை மட்டுமல்லாமல், நம் எண்ணங்களிலும் தன் நம்பிக்கையின் சிகரத்தைத் தொட்டிருக்கிறார்.

SHARE