
யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், விசேட அதிரடி படையினர் பல்வேறு பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கோப்பாய் பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது மர்மநபர்கள் வாள்வெட்டு தாக்குதல் நடத்தினர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத குழுக்கள் தாக்குதல் மேற்கொண்டதன் காரணமாக பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் ஆவா குழுவின் செயற்பாடா என சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எப்படியிருப்பினும் இந்த தாக்குதல் மேற்கொண்டது யாரென இதுவரையில் தகவல் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக 4 பொலிஸ் குழுக்கள் இணைக்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் காயமடைந்துள்ளனர். அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
3 மோட்டார் சைக்கிள்களில் 9 இளைஞர்கள் முதலில் வருகை தந்துள்ளதாகவும், பின்னர் மேலும் 4 மோட்டார் சைக்கிள்களில் இளைஞர்கள் வருகை தந்து இந்த தாக்குதலில் இணைந்துள்ளனர்.
வாள் மற்றும் பாரிய கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்குதல் மேற்கொள்வதற்காக வந்த சந்தேகநபர்கள் கோப்பாய் மைதானத்திற்கு அருகிலுள்ள காட்டில் மறைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.