வித்தியா படுகொலை சம்பவம்! பொலிஸ் பரிசோதகர் சிறிகஜனுக்கு ஏற்பட்டுள்ள நிலை

259
 

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் தேடப்பட்டு வரும் நபரான உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அத்துடன், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள பொலிஸ்மா அதிபர் அங்கு இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இதனை கூறியுள்ளார்.

 

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “யாழ். கோப்பாய் பகுதியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.

கை, கால் உள்ளிட்ட இடங்களில் வாள்வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவருக்கும் சற்று பலத்த காயங்களே ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், சந்தேகநபர்களை கைது செய்வதற்கு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், இனிவரும் காலங்களில் சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து பொது மக்கள் தகவல் தெரிவித்து பொலிஸாருக்கு உதவ வேண்டும்.

அந்த வகையில், சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்கள் குறித்த தகவல்களை 0718591028 என்ற இலக்கத்திற்கு அறியத்தர முடியும்.

மேலும், புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் தேடப்பட்டு வரும் நபரான உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் பொலிஸ் சேவையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது பொலிஸ் சேவையில் இல்லை.

இந்நிலையில், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு வகையான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றது. ஆகையினால் சம்பவம் தொடர்பில் சற்று குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் விசாரணைகள் மேற்கொண்டு அது குறித்த முழுமையான தகவல்களை வெளியிட முடியும் என பொலிஸ்மா அதிபர் மேலும் கூறியுள்ளார்.

SHARE