
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நியமிக்குமாறு உத்தரவிடக் கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியாது என கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை எதிர்ப்பு மனு சம்பந்தமான விசாரணையை எதிர்வரும் 29 ஆம் திகதி நடத்த நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
மனு மீதான விசாரணையை நடத்த எவ்வித சட்டரீதியான அடிப்படைகளும் இல்லை எனவும் அடிப்படையற்ற குற்றச்சாட்டில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க சார்பில் அவரது சட்டத்தரணி எதிர்மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை ஆராய்ந்த பின்னர், வழக்கை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதா இல்லையா என்று தீர்ப்பளிக்கப்படும் என கொழும்பு மாவட்ட நீதவான் சுஜீவ நிஸ்ஸங்க அறிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மகிந்த ராஜபக்சவை மீண்டும் நியமிக்குமாறு உத்தரவிடக் கோரி அந்த கட்சியின் அகில இலங்கை செயற்குழு உறுப்பினர் இருவர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.