முதலமைச்சரிற்கும், கூட்டமைப்பு தலைவர் சம்பந்தர், பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் நேற்றிரவு கூடி கதைத்தனர். இதன்போது நடந்தவற்றை வெளிப்படுத்துகிறோம். கூட்டத்தின் ஆரம்பத்திலேயே விக்னேஸ்வரன் சொன்னது- நான்கு அமைச்சர்களையும் மாற்றி தகுதியானவர்களை நியமிக்கவும், நான்கு கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களை நியமிக்கவும் தனக்கு அதிகாரம் வேண்டுமென கூறினார்.
இதன்போது கூட்டத்தில் சர்ச்சை ஏற்பட்டது. கட்சிகளின் சம்மதத்துடன்தான் உறுப்பினர் நியமிக்கப்பட வேண்டும் என்று மாவை கூறினார். அனந்தி தமது உறுப்பினர் இல்லை அவரை கணக்கிட முடியாதென்றார்.
சத்தியலிங்கத்தை விலக்கவே முதல்வர் குறியாக இருக்கிறார், சத்தியலிங்கத்தை ஏன் விலக்க வேண்டுமென மாவை கேட்டார். இதன்போது குறுக்கிட்ட சித்தார்த்தன்- சத்தியலிங்கத்தை விலக்கினால் பொருத்தமான வேறு நபர் சுகாதார அமைச்சுக்கு இருக்கிறாரா? விசாரணைக்குழு அறிக்கையிலும் சத்தியலிங்கம் மீது குற்றம் சுமத்தப்படவில்லைதானே என்றார். இதற்கு பதிலளித்த முதல்வர்- விசாரணைக்குழு அறிக்கையில் தவறுகள் உள்ளன. சத்தியலிங்கம் மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரத்துடன் எனக்கு கிடைத்துள்ளன என்றார்.
இதற்கு பதிலளித்த சித்தார்த்தன்- விசாரணைக்குழுவின் அறிக்கையில் பிழையிருக்கிறது என்றால் எதற்காக மற்ற இரண்டு அமைச்சர்களை நீக்கினீர்கள்? அவர்களை நீக்கியது பிழை. அவர்களை நீக்கினேன் என்பதற்காக சத்தியலிங்கத்தையும் நீக்குவது பிழையென்றார். சிறிகாந்தாவும் அதை ஆமோதித்தார்.
எனினும், சத்தியலிங்கத்தை நீக்குவதென்ற முடிவில் முதல்வர் உறுதியாக இருந்தார். இறுதியில், நான்கு கட்சிகளின் சம்மதத்துடன் அமைச்சர்களை நியமிப்பதென முடிவெடுக்கப்பட்டது. இந்த இடத்தில் உள்ள சிக்கல்- புளொட்டிற்கு தற்போது அமைச்சு கிடையாது. நான்கு கட்சிகளின் சம்மதத்துடன் அமைச்சரை நியமிப்பதெனில், அனந்தி பதவி விலகி புளொட் பிரதிநிதியொருவர் அமைச்சராக வேண்டும். அல்லது அனந்தியை புளொட் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுபோல சுகாதார அமைச்சராக யார் நியமிக்கப்படுவது? வைத்தியர் குணசீலனை நியமிக்க ரெலோ சம்மதிக்காது.
இந்த கலந்துரையாடலில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தொடர்ந்து வலியுறுத்தியது- மாகாணசபை சீர்கேட்டிற்கு தமிழரசுக்கட்சிதான் காரணம், ஆரம்பத்திலிருந்தே மாகாணசபைக்குள் எல்லா விடயங்களையும் தன்னிச்சையாக முடிவெடுத்து செய்தார்கள் என பட்டியல்படுத்தினார். மாகாணசபை ஆரம்பித்த சமயத்தில், கட்சிகளின் தலைவர்கள், நான்கு அமைச்சர்கள், முதலமைச்சர் உள்ளிட்டோர் அடிக்கடி சந்தித்து கதைப்பதென முடிவெடுத்தபோதும், விக்னேஸ்வரன் உங்கள் ஆள் என நினைத்து அந்த சந்திப்பை குழப்பினீர்கள் என தொடங்கி, நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு வரை தமிழரசுக்கட்சியின் குழப்பங்களை பட்டியலிட்டார். இதன்போது மாவை சேனாதிராசா தலையை குனிந்துகொண்டு, பெருவிரலால் நிலத்தில் கீறிக்கொண்டிருந்தார்.
இந்த சர்ச்சை நீடித்துக்கொண்டிருந்த போது, மாவை சோதிராசா சூடாகி, முதலமைச்சரை எச்சரிக்கும் தொனியில் பேசினார். நீங்கள் இப்படி தன்னிச்சையாக முடிவெடுத்துக் கொண்டிருந்தால், உறுப்பினர்கள் கோபமடைந்து இன்னொரு நம்பிக்கையில்லா பிரேரணைதான் கொண்டு வருவார்கள் என்றார். இதை கேட்டு சூடான விக்னேஸ்வரன்- “நல்லது. உங்களால் முடிந்தால் அமை செய்யுங்கள். அப்படி செய்தால் இனி கூட்டமைப்பிற்கு நான் பொறுப்புகூற வேண்டியவன் இல்லைத்தானே. அதன்பின் என்ன செய்வதென எனக்கு தெரியும்“ என்றார். இந்த பதிலால் மாவை திக்குமுக்காடிப்போக, சம்பந்தன் குறுக்கிட்டு, மாவை அப்படி பேசியது தவறென கண்டித்து, நிலைமையை சுமுகமாக்கினார்.
இறுதியில் நான்கு கட்சிகளின் தலைவர்கின் சம்மதத்துடன் அமைச்சர்கள் நியமனம் செய்வதென முடிவானது.
இதன்போது ஜெயசேகரன் நியமனத்தை சித்தார்த்தன் கிளப்பினார். சம்பந்தனிற்கு எழுதிய கடிதத்தில், புளொட்டிற்கு உறுப்பினர் பதவிவழங்குவதாக முடிவெடுக்கப்படவில்லையென மாவை குறிப்பிட்டிருந்ததை சுட்டிக்காட்டி, அது தவறென்றார். அப்படியொரு முடிவெடுக்கப்படவில்லையென்றார் மாவை. மாகாணசபை தேர்தல் முடிந்ததும் உதயன் சரவணபவனின் விருந்தினர் விடுதியில் கூடிய கட்சித்தலைவர்கள் இந்த முடிவை எடுத்ததாக சித்ததார்த்தன் சொல்ல, சுரேஷ், செல்வம், சிறிகாந்தா ஆகியோரும் அதை ஆமோதித்து, அந்த கூட்டத்தில் மாவை இருந்ததையும் குறிப்பிட்டார்கள். தனக்கு எல்லாம் மறந்து விட்டதென மாவை தடுமாறிக்கொண்டிருக்க, சம்பந்தன் இடையில் தலையிட்டு, சித்தார்த்தனை சமரசப்படுத்தி, இது தொடர்பில் பின்னர் தான் அவருடன் பேசுவதாக குறிப்பிட்டார். இத்துடன் அந்த சர்ச்சையும் முடிந்தது.
(தொடரும்)
——————————————————————-