நாய், பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகள் மூலம் ஆஸ்துமா உண்டாவது உண்மை. அதிலும் ஆஸ்துமா பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் வீட்டில் பூனை வளர்ப்பதால், ஆஸ்துமாவின் தீவிரம் பல மடங்கு அதிகமாகும்.
பூனை வளர்ப்பதால் ஆஸ்துமா ஏற்படுவது எப்படி?
வளர்ப்புப் பிராணிகளின் உடலில் இருந்து உதிரும் செல்கள், ரோமம், உமிழ்நீர், சிறுநீர், மலக்கழிவு ஆகியவை காற்றில் கலந்து நாசி, சரும அலர்ஜியை ஏற்படுத்தும்.
பூனை, நாய், முயல், கிளி, புறா, கோழி போன்ற வளர்ப்புப் பிராணிகளைத் தொட்டுத் தூக்கும் போதும், அவற்றோடு விளையாடும் போதும் மேற்கூறப்பட்ட அனைத்து அலர்ஜிப் பொருட்களும் நேரடியாகவே நம் உடலில் பட்டு அலர்ஜிக்கான அறிகுறிகளை வெளிப்படுத்தும்.
இந்த அலர்ஜிப் பொருட்கள் நம் உடலுக்குள் சென்று ஆன்டிஜென்களாக செயல்படும். அப்போது ரத்தத்தில் இம்யூனோகுளோபுலின் இ (IgE) எனும் எதிர்ப்புரதம் உருவாகும்
இது ஒவ்வாமைப் பொருளுடன் சேர்ந்து மாஸ்ட் செல்களைத் தூண்டும். இதன் காரணமாக மாஸ்ட் செல்கள் ஹிஸ்டமின், லுயூக்கோட்ரின் (Leukotriene) எனும் வேதிப்பொருட்களை வெளியேற்றும்.
இவை, ரத்தக்குழாய்களை விரிவடையச் செய்து நரம்பு முனைகளைத் தாக்கும். அதன் விளைவாக மூக்கு ஒழுகுவது, தும்மல், அரிப்பு, தடிப்பு, சருமம் சிவந்து வீங்குவது, ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
பின்பற்ற வேண்டிய எச்சரிக்கைகள்?
- அலர்ஜி உள்ளவர்கள் வீட்டில் வளர்ப்புப் பிராணிகள் எதையும் வளர்க்காமல் இருப்பதே நல்லது.
- வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்க்க ஆசைப்பட்டால், வீட்டின் வெளியில் தனியாக ஒரு அறையில் வளர்ப்பது நல்லது.
- வீட்டில் செல்ல பிராணிகளை வளர்ப்பவர்கள் படுக்கை அறைக்கு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- பூனை, நாய், முயல், கிளி போன்ற பிராணிகளை தொட்டுத் தூக்குவது, முத்தம் கொடுப்பது போன்ற பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்,
- வீட்டின் சுவர்கள், ஜன்னல் கிரில்களை அடிக்கடி தூய்மைப்படுத்தி ஜன்னல் திரைச்சீலைகளை அடிக்கடி மாற்றி சுத்தமாக வைக்க வேண்டும்.
- படுக்கை அறையின் விரிப்புகள், தலையணை உறைகளை வாரம் ஒருமுறை சூடான தண்ணீரில் ஊறவைத்து, சுத்தம் செய்ய வேண்டும்.