அமெரிக்காவின் செயல்பாடுகளை பொறுத்து அடுத்தக் கட்ட நடவடிக்கையை எடுக்க போவதாக வட கொரியா தலைவர் கிம் ஜாங் கூறியுள்ளார்.
வட கொரியா தொடர்ந்து அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தி வருகிறது.
இதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் வட கொரியாவின் செயலுக்கு நாங்கள் பதிலடி கொடுப்போம் என அமெரிக்கா கூறியுள்ளது.
இதையடுத்து அமெரிக்காவின் குவாம் தீவை விரைவில் தாக்குவோம் என வட கொரியா கூறியது.
மேலும், இது தொடர்பான திட்ட அறிக்கையை அந்நாட்டு ராணுவம் அதன் தலைவர் கிம் ஜாங்கிடம் கொடுத்துள்ளது.
இந்த அறிக்கையை பெற்ற பின்னர் கிம் ஜாங் கூறுகையில், குவாம் தீவு தாக்குதல் தொடர்பான நடவடிக்கையை முடிவெடுக்கும் முன் அமெரிக்காவின் செயல்பாடுகளை கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கப் போவதாக கூறியுள்ளார்.
மேலும், அணு ஆயுதங்களை நமக்கு அருகில் கொண்டு வந்த அமெரிக்கா முதலில் சரியான முடிவெடுத்து கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்கிறதா என பார்ப்போம் என்று கிம் ஜாங் கூறியதாக வட கொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது