‘ஆசிரியரைக் கைது செய்யும்வரை பிரேதப் பரிசோதனைக்கு ஒப்புக்கொள்ள மாட்டோம்’ – நாமக்கல் சிறுவனின் உறவினர்கள்

358

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சித்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள், பெருமாள்-சின்ராஜ் தம்பதியினர். இவர்களின் மூத்த மகன் விஸ்வேஸ்வரன், வயது 12. திருச்செங்கோடு அருகே உள்ள விட்டம்பாளையம் அரசு விடுதியில் தங்கி, விட்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்துவந்தார்.

கடந்த 17-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தார்கள். அவர்களோடு அப்பள்ளி ஆசிரியர் குப்புசாமியும் கிரிக்கெட் ஆடியிருக்கிறார்.

மாணவர்கள் போடும் பந்தை ஆசிரியர் குப்புசாமி அடிக்கும்போது, பேட் பிடிங்கிக்கொண்டு வந்து விஸ்வேஸ்வரன் மீது அடித்ததில், விஸ்வேஸ்வரன் மூளைச்சாவு அடைந்தார். அதையடுத்து, சேலம் மோகன்குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் விஸ்வேஸ்வரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இன்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அதையடுத்து, விஸ்வேஸ்வரனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், ஆதித்தமிழர் பேரவை என அனைவரும் விஸ்வேஸ்வரனின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்றும், இந்தச்சம்பவத்துக்குக்  காரணமான ஆசிரியர் குப்புசாமியைக் கைதுசெய்ய வேண்டும் என்றும் சேலம் கலெக்டர் அலுவலகத்தின் எதிரே சாலை மறியலில் ஈடுப்பட்டார்கள். அதையடுத்து, காவல்துறையினர் அவர்களைச் சமாதானம் செய்து மருத்துவமனையில் அமர வைத்திருக்கிறார்கள். இருந்தபோதும் இன்னும் பிரேதப் பரிசோதனைக்கு கையெழுத்துப் போடாததால், விஸ்வேஸ்வரனின் உடல், பிரேத அறையிலேயே இருக்கிறது.

இதுபற்றி விஸ்வேஸ்வரனின் அம்மா சின்ராஜ், ”என்னுடைய குழந்தையை அசிரியர் குப்புசாமி அடித்துக் கொன்றுவிட்டார். என் மகனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டு இன்றோடு  நான்கு  நாட்கள் ஆகிறது. இதுநாள் வரை பள்ளி நிர்வாகத்தில் இருந்தோ, அந்த அசிரியரோ வந்து பார்க்கவில்லை. எங்களிடம் போனில்கூட பேசவில்லை. என் மகன் விஸ்வேஸ்வரன் மூளைச்சாவு, கடந்த 17-ம் தேதி மதியம் 2 மணிக்கு நடக்கிறது. எங்களுக்கு இரவு 7 மணிக்குத் தகவல் கொடுக்கிறார்கள். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, அடித்துக் கொன்றிருப்பதுபோல தெரிகிறது. அதனால், அந்த ஆசிரியரை வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யும் வரை என் குழந்தையின் உடலை பிரேதப் பரிசோதனை செய்ய அனுமதிக்க மாட்டோம்” என்றார்.

நாமக்கல் மாவட்ட ஆதித்தமிழர் பேரவையின் மேற்கு மாவட்டச் செயலாளர் சரவணக்குமார், ”மாணவன் விஸ்வேஸ்வரன், விட்டம்பாளையம் அரசு விடுதியில் தங்கி, அங்கிருக்கும் விட்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறார். அவனுக்கு ஆஸ்டலில் ஒரு துயரச் சம்பவம் நடந்திருக்கிறது. சம்மந்தப்பட்ட ஆசிரியர் நேரில் வந்து இப்படி நடந்துவிட்டது என்று சொல்லி இருக்க வேண்டாமா? அந்த ஆசிரியரும் சரி, அந்தவிடுதியின் நிர்வாகமும் சரி, இதுநாள் வரை எட்டிக்கூட பார்க்கவில்லை. அவர்களின் மனநிலைமை எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதை நீங்களே பாருங்கள். ஆகையால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் குப்புசாமியை வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்ய வேண்டும். கைது செய்தால்தான் உடலை வாங்குவோம்” என்றார்.

SHARE