
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் காரசாரமாக உரையாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோவுடன் இலங்கையிலிருந்து அங்கு சென்றிருந்த முன்னாள் கடற்படை சிரேஷ்ட அதிகாரி ரியர் அட்மிரல் சரத் வீரசேகர உள்ளிட்ட முன்னாள் இராணுவத்தினரும் பௌத்தர்கள் சிலரும் கடும் தர்க்கத்தில்
ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நேற்று திங்கட்கிழமை வைகோ இருதடவைகள் உரையாற்றினார். இதன்போது அவர் இலங்கை அரசு தொடர்பிலும் இராணுவம் தொடர்பிலும் அங்கு இடம்பெற்ற இனப்படுகொலைகள் தொடர்பிலும் மிகவும் உணர்வுபூர்வமாகவும் ஆக்ரோஷமாகவும் உரையாற்றினார்.
இவ்வாறு உரையாற்றிவிட்டு வைகோ வெளியே வந்தபோது, அவரைச் சுற்றி வளைத்த இலங்கையைச் சேர்ந்த சிங்களவர் குழுவொன்று அவருடன் மிகமோசமான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி கடும் தர்க்கத்தில் ஈடுபட்டது.
வைகோவைச் சூழ்ந்துகொண்ட குழுவிலிருந்த பெண்ணொருவர், நீ இலங்கைப் பிரஜை இல்லையே? நீ எப்படி இலங்கையைப் பற்றிப் பேச முடியுமென மிகவும் ஆவேசமடைந்த நிலையில் கேள்வியெழுப்பினார். எனினும் வைகோ மிகவும் பொறுமையாக நீங்கள் யார்? இலங்கையைச் சேர்ந்தவரா? நீங்கள் சிங்களப் பெண்மணியா? என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண் ஆமாம் என்று கூறிவிட்டு மீண்டும் இலங்கையைப் பற்றிப் பேச நீ யார்? என உரத்த குரலில் சத்தமிட்டார்.
இதற்குப் பதிலளித்த வைகோ, நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் . எங்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொப்புள் கொடி இரத்த உறவு இருக்கின்றது. அதனால், எனக்கு எனது உறவுகள் தொடர்பில் பேசுவதற்கு உரிமையுண்டு. அதைக் கேட்க நீங்கள் யார்? என்று திருப்பிக் கேட்டார்.
அதற்குள் வைகோவை சுற்றி இன்னும் பல சிங்ளவர்கள் திரளத் தொடங்கினர். இவர்களில் இலங்கையின் முன்னாள் கடற்படை சிரேஷ்ட தளபதியாகவும் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் பிரதி அமைச்சராகவும் இருந்த சரத் வீரசேகர மற்றும் இன்னும் சில முன்னாள் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்டவர்கள், விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள், கொடூரமான கொலைகாரர்கள், அக்கிரமக்காரர்கள் அவர்களை ஆதரித்து நீ எப்படிப் பேச முடியுமென கடுந்தொனியில் மிரட்டினர்.
எனினும், இந்த மிரட்டலுக்கு சற்றும் அசராத வைகோ, இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்றவர்கள் நீங்கள். எங்கள் தாய்மார்களை எங்கள் சகோதரிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திப் படுகொலை செய்தீர்கள். எங்கள் பச்சைக் குழந்தைகளை ஈவிரக்கமின்றிக் கொன்று குவித்தீர்கள். நீங்கள்தான் கொலைகாரப் பாவிகள் எனப் பதிலடி கொடுத்தார்.
இவ்வாறு இவர்கள் வைகோவை சூழ்ந்து நின்று தர்க்கத்தில் ஈடுபட்டும் மிரட்டியும் கொண்டிருந்தபோது அதனை மனித உரிமைகள் பேரவைக்கு உள்ளேயிருந்த சிலர் வீடியோ எடுத்தனர்.
அதற்குள் இருந்து அவ்வாறு வீடியோ எடுப்பதற்கு அனுமதியில்லாத நிலையிலும் அவர்கள் இரகசியமாக அந்த வீடியோவை எடுத்தனர். இதன்மூலம் வைகோவை மனித உரிமைப் பேரவைக்குள் மீண்டும் நுழையவிடாமல் தடுப்பதற்காகவே இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக அங்கிருந்த ஈழத் தமிழர்கள் பின்னர் தெரிவித்தனர்.
சரத்வீரசேகர தலைமையிலான சிங்களவர்கள் சிறிதுநேரம் வைகோவை மிரட்டும் தொனியில் அவரைத் திட்டித் தீர்த்துவிட்டு அங்கிருந்து நகரவே வைகோவும் அவ்விடத்திலிருந்து அகன்று சென்றார்.
கடந்த வெள்ளிக்கிழமையும் வைகோ மனித உரிமை பேரவைக்கு வந்தபோது அவரை அடையாளம் காட்டி இலங்கையிலிருந்து சென்ற சிங்களவர் குழுவொன்று திட்டித் தீர்த்துக்கொண்டிருந்துள்ளது. இவ்வாறான நிலையிலேயே நேற்று வைகோவை நேரடியாக இக்குழுவினர் மிரட்டியுள்ளனர்.