ரொக்க பண பரிமாற்றம் இல்லாத சமூகத்தை உருவாக்க அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும் .-பிரதமர் மோடி

214

ரொக்க பண பரிமாற்றம் இல்லாத சமூகத்தை உருவாக்க அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி மாதம்தோறும், ‘பிரகதி’ (சாதக செயல்திறன் ஆளுமை மற்றும் உரிய காலகட்டத்தில் அமல்படுத்துதல்) என்ற தலைப்பில் உயர் அதிகாரிகளுடன் காணொலி காட்சி வழியாக கலந்துரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் நேற்றும் அவர் உயர் அதிகாரிகளுடன் காணொலி காட்சி வழியாக கலந்துரையாடினார்.

இது 22-வது கலந்துரையாடல் ஆகும். அப்போது அவர் ரெயில்வேயில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் 9 திட்டங்கள், சாலை, மின்வசதி, நிலக்கரி, கியாஸ் குழாய் துறைகளின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார்.

ரூ.37 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த திட்டங்கள் தமிழ்நாடு, கேரளா, டெல்லி உள்ளிட்ட பல பல மாநிலங்களில் செயல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. தேசிய பாரம்பரிய நகர வளர்ச்சி மற்றும் மேம்பாடு யோஜனா திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் அவர் ஆராய்ந்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வணிக வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள சிறுவணிகர்கள் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரிமுறையில் இணைய வேண்டும். இந்த ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையினால் சாதாரண மக்களும், வியாபாரிகளும் பலன் அடைய வேண்டும்.

ரொக்க பண பரிமாற்றம் இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்க அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும். இதற்காக டிஜிட்டல் முறையில் பண பட்டுவாடா செய்வதற்கு தொடர்ந்து முயற்சி எடுக்க வேண்டும்.

ஜன்தன் வங்கி கணக்குதாரர்களுக்கு ரூபே பற்று அட்டைகளின் பயன்பாட்டை அதிகரிக்க தேவையான வழிமுறைகளை நிதிச்சேவைகள் பிரிவின் செயலாளர் கண்டறிய வேண்டும்.

மத்திய அரசின் பல்வேறு துறைகள் ‘ஜிஇஎம்’ என்னும் அரசு மின்னணு சந்தையை பயன்படுத்துகின்றன. ஆனால் மாநிலங்களைப் பொறுத்தமட்டில் 10 மாநிலங்கள்தான் இதை பயன்படுத்துவதில் ஆர்வமாக உள்ளன. இந்த முறை, கொள்முதலை அதிகரிக்க துணை நிற்கிறது. வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்குகிறது.

இதை முடிந்தவரையில் பயன்படுத்துவதற்கு அனைத்து மாநில அரசுகளின் தலைமைச்செயலாளர்களும் வழிவகைகளை கண்டறிய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வங்கித்துறை தொடர்பான குறைகளை களைவதற்கான நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.

SHARE