20 வது திருத்தச்சட்டம் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு ஆபத்து. ஹபீஸ் அப்துல் முத்தலிப் ( பாதிஹ் கல்வி நிர்வனம் )-வரிப்பத்தான்சேனை தொகுதிவாரித்தேர்தல் முறை அரசங்கத்தால் அமுல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் முஸ்லிம்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகும் வீதம் குறையும் அபாயமுள்ளது. எனவே, இச்சட்டத்தை அமுல்படுத்த இரண்டு வாரங்கள் உள்ள நிலையில், இதை எமது முஸ்லிம் புத்திஜீவிகள் ஒன்றிணைந்து முஸ்லீம்களுக்குச் சாதகமான ஒரு தீர்வைப் பெற வேண்டிய தேவையிருக்கின்றது. எனவே, இந்தச்செய்தியை அனைத்து இலங்கை வாழ் முஸ்லிம்களுக்குத் தெரியப்படுத்துவது அவசியமாகும். இந்தத்திருத்தச் சட்டமானது முஸ்லிம்களுக்குப் புதிதான ஒரு விடையமல்ல. இதே போன்ற அரசியல் சீர்திருத்தங்கள் 1981, 1984, 1988 போன்ற ஆண்டுகளில் அதிகம் இடம்பெற்றுள்ளது . ஆனால், அந்தச் சீர்திருத்தங்களில் முஸ்லிம்களுக்கு சம அளவான பிரதிநிதித்துவம் வளங்கப்பட்டுள்ளது. இது இலங்கை சுதந்திரமடைந்ததிலிலிருந்தது முஸ்லிம்களுக்குச் சமமாகத்தான் பகிந்தளிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 2015- 06-08 அன்று பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட புதிய 20 ஆவது திருத்தச்சட்டம் முஸ்லிம்களின் பிரதிநித்துவத்தில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதில் அமுல்படுத்தப்படவிருக்கும் தொகுதிவாரித்தேர்தல் முறையூடாக எங்களுடைய முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை இழக்கு வாய்ப்புள்ளது. 20ஆவது சீர்திருத்தச்சட்டமானது கடந்த காலத் தெரிவுகளைப் போன்றல்லாமல் தொகுதிவாரியான தெரிவு முறையொன்றை தற்கால அரசு பாராளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளது. அதில் இலங்கை தேர்தல் நிருவாகத்தின் படி 1970களில் அறிமுகஞ்செய்யப்பட்ட 168 தொகுதிகளில் உறுப்பினர்கள் தெரிவு செய்யும் முறை தற்போதும் இருந்து வருகிறது. இந்தத்தேர்தல் கணிப்பிட்டு முறை பிழையானது. இந்தத்தேர்தல் மூலம் தகுதி வாய்ந்த கட்சிகளுக்குப் பாராளுமன்றம் செல்வதற்கான சந்தர்ப்பம் கிடைப்பதில்லை என்றே அரசு தொகுதி வாரியான தேர்தல் கணிப்பு முறையை அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இது பெரும்பான்மையினருக்கு நன்மையாக இருந்தாலும், சிறுபான்மையினருக்கும் , சிறுபான்மைக்கட்சிகளுக்கும் ஆபத்துக்கள் இருக்கின்றன. தற்போது நடைமுறைப்படுத்தவிருக்கும் தொகுதிவாரி முறையில் 168 ஆக இருந்த தொகுதிகள் 125 ஆகக் குறைத்து, மாவட்ட விகிதாசாரம் 75, தேசிய விகிதாசாரம் 25 ஆகக்குறைத்து 255 ஆக இருந்த பாராளுமன்ற அங்கத்துவத்தை 225 ஆகக் குறைப்பதற்கான ஒரு முறை தான் இது. அதே போல் இந்த முறை மூலம் ஒரு தொகுதியில் ஒருவர் என்ற அடிப்படையில், 125 தொகுதிகளில் 125 போர் பாராளுமன்றத்திற்குத் தெரிவாக்கப்படுவர். இவ்வாறு தெரிவு செய்யப்படுகின்ற போது முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், NFGG போன்ற கட்சிகள் ஒரு தொகுதியில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படுவது கடினமானதாக மாறும். அவ்வாறு இந்தக்கட்சிகள் தேசிய இரீதியில் போட்டியிடும் போது, முஸ்லிம்கள் 50 % சதவீதத்திற்கு மேலாக வாழ்கின்ற தொகுதிகளில் மாத்திரம் தான் முஸ்லிம் பிரதிநிதியைப் பெற முடியும். உ+ம் = சம்மாந்துறை, கல்முனை, பொத்துவில், மூதூர், புத்தளம் போன்ற தொகுதிகளில் மாத்திரம் தான் முஸ்லிம்களுக்கு உறுதியாகப் பாராளுமன்ற அங்கத்துவம் கிடைக்குமென்று எங்களால் கூற முடியும். ஆனால், முஸ்லிம்கள் சிறுபான்மையாக இருக்கும் தொகுதிகளில் முஸ்லிம்களுக்கென தனியான ஒரு பாராளுமன்ற அங்கத்துவம் பெறுவது சாத்தியமற்றவொன்றாக மாறும். 22 தேர்தல் மாவட்டங்கில், 18 மாவட்டங்களில் முஸ்லிம்கள் பரவலாக வாழ்கிறார்கள். இதில் விகிதாசார அடிப்படையில் பார்க்கின்ற போத 22/23 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைக்கப்பெற்றுள்ளார்கள். ஆனால், தொகுதிவாரி தெரிவு முறையைப் பார்க்கின்ற போது, 8 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தான் கிடைக்கும் வாய்ப்புள்ளது. எனவே, முஸ்லிம்கள் சிறுபான்மையாக இருக்கும் தொகுதிகளில் குரல் கொடுக்க எவரும் இருக்கமாட்டார்கள். எனவே, இதற்கு என்ன தீர்வு ? இதனால் தமிழ்க் கட்சிகளுக்கு எந்த பாதிப்பும் வராது. காரணம் அவர்கள் வட மாகாணத்தில் செறிந்து வாழ்கின்றார்கள். அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய ஆசனங்கள் அனைத்தும் கிடைக்கும். ஆனால், முஸ்லிம்களுக்குத்தான் இந்தப்பிரச்சினை ஏற்படும். காரணம் நாங்கள் நாடு பூராக கலைந்து வாழ்கின்றோம். இன்னும் ஒரு பிரச்சினையுள்ளது. அரசாங்கத்திற்கு ஆட்சியமைப்பதற்கு King Maker ஆக முஸ்லிம் காங்கிரஸ் தான் காலா காலமாகத் திகழ்ந்து வந்தது. ஆனால், எதிர்வருகின்ற ஆட்சியில் நேரடியாக இலங்கை தமிழரசுக்கட்சி (ITAK) பெரும் செல்வாக்குள்ளதாக மாறப்போகின்றது. எமது முஸ்லிம் கட்சிகள் King Maker செல்வாக்கினை இழக்கப்போகின்றது. இதற்கான தீர்வாக இரண்டு முஸ்லிம் கெபினட் (Cabinet) கட்சிகள் இரட்டை வாக்குச் சீட்டு முறை ( Double voting system ) என்ற ஒரு ஆலோசனையை முன்வைத்தது. அதனை அரசு நிராகரித்து விட்டது. இந்தத் தொகுதிவாரித்தேர்தல் முறை நடைமுறையில் வந்ததால், முஸ்லிம்களுக்கான தனியான பிரதிநிதித்துவத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்படும் அபாயமுள்ளது. எனவே, இதனைத் தவிர்ப்பதற்கு நாங்கள் மாவட்டஇ ரீதியில் அல்லது மாகாண இரீதியில் ஒரு முஸ்லிம் பிரதிநிதியாவது எடுப்பதற்கு முஸ்லிம் அரசியல் கட்சிகள், முஸ்லிம் சமூக அமைப்புகள், முஸ்லிம் சட்டத்தர்ணிகள் சங்கங்கள் ஒன்று சேர்ந்து ஒரு குழுவை நியமித்து, உத்தியோகபூர்வமான ஒரு அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.
20 வது திருத்தச்சட்ட மூலமும், முஸ்லிம்களின் எதிர்பார்பும். காஸிபி- 1978 ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அரசியல் யாப்பு 19 வது திருத்தம் குறிப்பிடப்பட்ட சட்டத்திருத்தங்கள் சேர்க்கப்பட்டு, தற்போது 20 வது திருத்தச் சட்டத்தினை எதிர்நோக்கிக்கொண்டிருக்கின்றது. இவ்வரசியல் யாப்பினை அறிமுகப்படுத்திய ஐ.தே.க அதன் ஆட்சிக்காலத்தில் 16 தடவை திருத்தங்களை முன்வைத்து, அதில் 15 திருத்தங்களை அமுல்படுத்தி நடைமுறைப்படுத்தியது. இதில் 13. 14. 15. 16 ஆகிய திருத்தங்களில் சிறுபான்மையினரின் நலங்கள் உள்வாங்கப்பட்டிருந்தன . சு.கட்சி தலைமையிலான அரசு 17, 18வது திருத்தங்களை 2001. 2010 ம் ஆண்டுகளில் முன்வைத்து சட்டமாக்கியது. 17 வது திருத்தத்தில் சொல்லப்பட்ட அம்சங்கள் 18 வது திருத்தத்தின் மூலம் செயலிழக்கப்பட்டதுடன், முக்கியமாக ஜனாதிபதி ஒருவர் இரு தடவைக்கு மேல் ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடலாம் என்ற சட்டத்திருத்தத்தினை அதே சு.கட்சி அரசே முன்வைத்திருந்தது. 19 வது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் சில அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, மீண்டும் 17 வது திருத்தத்தில் சொல்லப்பட்டவை அமுலுக்கு வரும் வகையில் அதனுடன் இணைந்த பல திருத்தங்கள் உள்வாங்கப் பட்டுள்ளதை அறிவோம். இந்நிலையில், புதிய அரசு 20 வது திருத்தத்தினைப் பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்கான ஏற்பாடுகளைச்செய்து கொண்டிருக்கின்றது.
இன்று இலங்கையில் காணப்படும் பாராளுமன்ற அரசியல் சூழ் நிலை முன் ஒரு போதுமில்லாத புதிய சம்பிரதாயத்தினையும், புரிந்துணர்வினையும் ஏற்படுத்தியிருக்கின்றது. இவ்வாறான நிலை மீண்டும் ஏற்படுமா என்பது நடைபெறும் பொதுத்தேர்தலின் பெறுபேறே தீர்மானிக்கும். இதனைப் பயன்படுத்தி தேர்தல் திருத்தம் அடங்கிய 20 வது திருத்தத்தினைச் சட்டமாக்கி நடைமுறைப்படுத்த இரு பெரும் கட்சிகளும் சிந்தித்துக் கொண்டிருக்கின்றன. இதில் சு.கட்சி யினர் தான் அதிகமான ஈடுபாட்டினை வெளிப் படுத்துகின்றனர். இருபதாவது திருத்தம் “முழுமையாக நடைமுறையிலுள்ள மாவட்டத்தெரிவுக்குப் பதிலாக, தொகுதி அடிப்படையான தேர்தலையும், தொகுதிகளின் மீள் நிர்ணயத்தினையும், உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அதிகரிப்பையும் மற்றும் இரு தெரிவு முறைமைகளும் உள்ளடங்கிய சில ஏற்பாடுகள் பற்றியும்” சுட்டிக்காட்டப் படுள்ளதாகக் கூறப்படுகின்றது.. இத்திருத்தத்தில் சிறுபான்மைச் சமூகத்தின் நலங்கள், சிறிய கட்சிகளின் இருப்புக்கான ஏற்பாடுகளை உள்வாங்குவதற்கான கருத்துப்பரிமாறல்கள் உரியவர்களால் மு.காங்கிரஸ் தலைவரின் தலைமையில் இடம்பெறுகின்றன. நடை முறையிலுள்ள தெரிவு முறைமை சிறுபான்மைச் சமூகத்தின் ஒற்றுமையினையும் அவர்களை அவர்களின் சமூகம் சார்ந்து ஒரு கொடியின் கீழ் ஒன்றிணைவதற்கான வாயிப்பினையும் பெற்றுத்தருவதோடு அதிக எண்ணிக்கையான பாராளுமன்றப் பிரதிநிதிகளைப் பெறுவதற்கான சந்தர்பத்தினையும் இம்முறைமை கொண்டுள்ளது. ஆட்சியமைக்கும் போது சிறுபான்மைச் சமூகத்தினையும் சிறிய கட்சிகளின் தேவையினையும் ஆட்சியாளர்களுக்கு உணர்த்தும் தன்மை மாவட்ட அடிப்படையிலான தெரிவில் காணப்படுவது அச்சமூகங்கள் பெற்றிருக்கும் கௌரவம் என்றே கூறலாம். தேர்தல் முறைமை மாற்றலுக்குள்ளாகி பழைய தொகுதி முறைமை ஏற்படுத்தப்படும் போது, சிறுபான்மைச் சமூகத்தின் பாதிப்பு, விளைவு என்பன பற்றி பல தரப்பாலும் சுட்டிக்காட்டப்படுகின்றது. வட கிழக்கினை மையமாகக் கொண்டு அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் தமிழ் சமூகம், தொகுதி முறைமையின் கீழ் தனது பிரதிநிதித்துவத்தினை இலகுவில் பெறுவதற்கான வாய்புண்டு. வட கிழக்கிற்கு அப்பால் மலையக தமிழ் சமூகம் சார்ந்து அரசியல் முன்னெடுக்கப்படுவதால் குறிப்பிடப்பட்ட சில பிரதிநிதித்துவத்தினைத் தவிர அதிகமான பிரதிநிதிகளை அவர்களால் பெற முடியாத நிலையே காணப்படுகின்றது. அந்த வகையில், மலையக சமூகமும் பாதிப்புக் குள்ளாகின்றது. இங்கு இரண்டாவது சிறுபான்மைச்சமூகமாக வாழும் முஸ்லிம்களின் பாதிப்பு வீதம் இரு சமூகத்தினை விடவும் சற்று அதிகம் தான். கிழக்கில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் தொகுதி முறைமையில் உறுதிப் படுத்தப்படும். இருப்பினும், அதிகமான அபேட்சகர்கள் தேர்தலில் குதிக்கும் போது தங்களது பிரதிநிதித்துவம் இழக்கப்படக்கூடிய நிலைமை கிழக்கின் சில இடங்களில் காணப்படுகின்றது.
தொகுதி முறைமை தேர்தல் நடைபெற்ற காலங்களைப் பார்க்கும் போது அதனை அறியலாம். கிழக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளிலிருந்து முஸ்லிம் பிரதிநிதித்துவம் தெரிவுக்குள்ளாவதில் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி வரும். கொழும்பு மத்தி, பேருவளை, ஹரிஸ்பத்துவ, புத்தளம் போன்ற தேர்தல் தொகுதிகளில் தொகுதி முறைமையில் உறுப்பினர்கள் தெரிவு செயப்பட்டாலும், இன்றுள்ள நிலையில் தொகுதி முறைமை அறிமுகப்படுத்தப்படின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் இழக்கப்டக்கூடிய சூழலே காணப்படுகின்றது. இன்று பாராளுமன்றத்தில் கிழக்கு மாகாணத்திற்கு வெளியில் மக்களால் தெரிவு செயப்பட்ட 9 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். இவ்வெண்ணிக்கையில் பாரிய மாற்றம் ஏற்படக் கூடிய சாத்தியப்பாடுகளுண்டு. மேலும், முஸ்லிம்களின் அரசியல் தனித்துவக்கட்சி மூலம் முன்கொண்டு செல்வதில் பெருந் தடங்கல்கள் வரலாம். தொகுதிகளில் தெரிவுக்குள்ளாகி சிலர் மிக இலகுவில் கட்சி மாறி கட்சிகளைப் பலவீனப்படுத்துவர். தனித்துவமாக சில உரிமைகளையோ, சலுகைகளையோ அரசியல் இரீதியில் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் பறிக்கப்பட்டுப் போகும். சகோதர இனங்களில் காணப்படும் நல்ல விடயத்துக்காக குரல் கொடுக்கும் சிறிய கட்சிகளின் பாராளுமன்றத்தின் குரல் நசுக்கப்பட்டு விடும். தற்போதுள்ள முறைமையினை மாற்றி, நடைமுறைப்படுத்த இரு பெரும் கட்சிகளும் தனக்கான அரசியல் நகர்வுக்காக வேண்டியே இதனை முன்னெடுகின்றன என்பது மிகத்தெளிவானது. விகிதாசாரத்தேர்தல் நடைமுறையிலுள்ள இக்காலத்தில், முஸ்லிம் சமூகம் பெறுவதற்கென்றே இருக்கின்ற மாத்தளை, குருணாகல், புத்தளம், களுத்துறை போன்ற மாவட்டங்களின் மூலம் இலகுவில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவதினைப் பெறுவதற்கான சந்தர்ப்பம் இருந்தும் கூட, இது வரை அது பெறப்படவில்லை.
சகல அரசியல்வாதிகளும் தான் சார்ந்துள்ள கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள் என்று அழைப்பவர்களாகவும், சரி காண்பவர்களாகவுமேயுள்ளனர். அதற்கான முயற்சிகளில் அரசியல்வாதிகள் இதய சுத்தியுடன் ஈடுபடவுமில்லை. வெற்றி கொள்வதற்கான திட்டங்களை வகுக்கவுமில்லை. இந்நிலையில், தொகுதி முறைமையின் போது எம் அரசியல்வாதிகள் எவ்வாறு செயற்படப்போகின்றார்கள் என்பது தெளிவானது. இன்றைய சூழ்நிலையில் தேர்தல் முறைமையினை மாற்றலுக்குள்ளாகியே தீர வேண்டுமென்ற நிலையில் ஆட்சியாளர்கள் இருப்பதனால், ஆட்சியில் முக்கிய பங்காற்றிய சிறுபான்மையினரும், சிறிய கட்சிகளும் தன் சமூகம் சார்ந்து பாதிப்பில்லாத நிலைமைக்கு திருத்தத்தினை சட்டமாக்க துணைபுரிவதே முக்கியமாகக் கொள்ளப்பட வேண்டியுள்ளது.
17. 18 மற்றும் 19 வது திருத்தச்சட்டங்களில் மு.காங்கிரஸ் கட்சியின் பங்களிப்பினை மையமாகக் கொண்டு, அக்கட்சியின் தலைவரின் தலைமையில் சிறுபான்மை, சிறிய கட்சிகள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆறுதலளிக்கின்றது. இறுதி முடிவு வெற்றியளிப்பதில் தான் சிறுபான்மைக் கட்சிகளினதும், குறிப்பாக முஸ்லிம்களின் அரசியல் இருப்பும் தங்கியுள்ளது. முஸ்லிம் அரசியல் நிலைத்து நிற்பதற்கு விகிதாசார முறைமை மிக உதவியாகவே அமையும்.
முஸ்லிம்களுக்கான உரிய தீர்வு பெற்றுக் கொடுக்கப்படாத நிலையில், பெரிய கட்சிகளின் எதிர்பார்ப்பு மாத்திரம் பூர்த்தியாக்கப்படின், முஸ்லிம் அரசியல் வரலாற்றில் ஈடு செய்ய முடியாத துரோகமாகவே பார்க்கப்படும். ஆட்சிக்குப் பாங்காற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் பங்களிப்பினை இச்சமூகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றதது. சிறந்த ஆட்சி நடைபெறும் இக்கால கட்டத்தில் சகல சமூகங்களினதும் அபிலாசைகளை அரசு நிறைவேற்றும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் மக்கள் உள்ளனர்.