ரஜினி மனதில் 100 திட்டங்கள்..!!

290

ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று இதுவரை தமிழருவி மணியன் மட்டுமே சொல்லி வந்த நிலையில் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் இன்று அதை உறுதிப்படுத்தியுள்ளார்.

ரஜினி கடந்த மே மாதம் ரசிகர்களை சந்தித்து தான் அரசியலுக்கு வரப் போவதை உறுதிப்படுத்தினார். அதேநேரம் போர் வரும்போது தயாராவோம் என்று ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஆனால் அதன் பிறகு காலா பட வேளைகளில் பிசியான ரஜினி அரசியல் ரீதியான தனது அறிவிப்புகள் எதையும் வெளியிடவில்லை. முரசொலி பவள விழாவில் கூட மேடையேறுவதைத் தவிர்த்தார் ரஜினி.

ஆனால் இந்த இடைவெளியில் நடிகர் கமல் தனது அரசியல் பிரவேசத்தை ட்விட்டரில் விதைத்து பல விழாக்களின் மூலம் வளர்த்து, ‘நான் முதல்வர் ஆவேன்’ என்று சொல்லி இந்திய அளவிலான அரசியல் தலைவர்களையும் சந்தித்து வருகிறார் கமல்.

ரஜினிக்கு முன்னதாக கமல் கட்சி ஆரம்பித்துவிடுவார் என்று பேசப்பட்டு வரும் நிலையில் இன்று (அக்டோபர் 3) சென்னையில்,ஸ்ரீதயா அறக்கட்டளை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் ரஜினியின் மனைவி லதா.

இந்த விழா முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய லதா ரஜினிகாந்த்,

’’ரஜினி காந்த் அரசியலுக்கு வந்தால் அனைத்து வகையிலும் நல்லது செய்வார். ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து அவருக்குத்தான் தெரியும். அவர் அரசியலுக்கு வந்தால் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். அவர் அரசியலுக்கு வந்தால் நல்லது நடக்கும். நல்லது செய்வதற்கான 100 திட்டங்கள் ரஜினியின் மனதில் இருக்கின்றன’’ என்று தெரிவித்தார்.

SHARE