தெலங்கானாவின் ஐதராபாத்தில் பெய்த கனமழை காரணமாக அந்நகரம் வெள்ளத்தில் மூழ்கியது.
தெலங்கானா தலைநகர் ஐதாரபாத்தில் நேற்று (அக். 2) மாலை கன மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 5 மணி நேரத்துக்குக் கொட்டித் தீர்த்த இந்த மழை காரணமாகச் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமமடைந்தனர். பல பகுதிகளில் வெள்ள நீர் செல்ல வழியில்லாமல், வீடுகளிலும் வணிக நிறுவனங்களிலும் புகுந்தது. ஐதராபாத் விமான நிலையத்திலும் வெள்ளம் சூழ்ந்ததால் விமானச் சேவை பாதிக்கப்பட்டது.
மாலை 4.30 முதல் இரவு 8.30 வரையில் 67.6 செ.மீ.க்கு மழை பதிவாகியுள்ளது. இந்த திடீர் மழை காரணமாக 3 பேர் பலியாகியுள்ளனர். 28 வயது வாலிபர் மற்றும் அவரது 6 வயது மகன் ஆகியோர் சுவர் விழுவதும், மற்றொரு நபர் மின்சாரம் தாக்கியும் உயிரிழந்துள்ளனர். விரைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படி ஐதராபாத் மாநகராட்சி நிர்வாகத்துக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. சில இடங்களில் இன்னும் வெள்ள நீர் வடியாமல் உள்ளது. இன்று காலை முதல் மழை பெய்யவில்லை என்றபோதும், இன்றும் நாளையும் ஐதராபாத்தில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கனமழை காரணமாகப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.