பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் நேற்று 81-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டு வளாகத்திற்குள் நுழைந்து போராட முயன்ற அவர்களை போலீசார் கைது செய்து, இரவில் விடுவித்தனர். இந்தநிலையில் போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு உள்பட 4 விவசாயிகள் நேற்று காலை டெல்லி மாநகர போலீஸ் இணை கமிஷனர் அஜய் சவுத்ரியை நேரில் சந்தித்து ஒரு மனு அளித்தனர்.
அந்த மனுவில், ‘அரசியல் அமைப்பு சட்டப்படி, பிரதமர் மக்களை சந்தித்து குறைகளை கேட்க வேண்டும். ஆனால் பிரதமர் மோடி தமிழக விவசாயிகளை சந்திக்க மறுக்கிறார். இதன்மூலம் தனது கடமையை அவர் செய்யவில்லை. எனவே, எங்களது கோரிக்கைகளை பரிசீலிக்க பிரதமருக்கு அறிவுறுத்தும்படி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியிடம் மனு அளிக்க விரும்புகிறோம். அதற்காக சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்ல எங்களை அனுமதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு உள்ளது.