விமானப்படை தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. டெல்லி அருகே உள்ள காஜியாபாத்தில் நடந்த விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், விமானப்படை தளபதி மார்ஷல் தனோவா, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் கலந்துகொண்ட விமானப்படை தளபதி தனோவா பேசியதாவது:-
நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு எதிராக எந்த ஒரு சவாலையும் எதிர்க்கொள்வதற்கு இந்திய விமானப்படை தயாராக உள்ளது. குறுகிய கால அவகாசத்தில் விமானப்படை போருக்கு தயாராகிவிடும் ஆற்றல் கொண்டுள்ளது. பல்முனை தாக்குதல்களில் இருந்து சமாளிக்கும் திறன்களை கொண்டுள்ள விமானப்படை, ராணுவம் மற்றும் கடற்படையுடன் இணைந்து செயல்படும்.
கடந்த ஆண்டு பதன்கோட்டில் உள்ள விமானப் படை தளம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பின், விமானப்படை சம்பந்தப்பட்ட இடங்களுக்கு எதிராக விடுக்கப்படும் அச்சுறுத்தல்களை எதிர்க்கொள்ளும் வகையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
3 பெண் விமானிகள் அவனி சதுர்வேதி, பாவனா காந்த் மற்றும் மோகனா சிங் ஆகியோர் போர் விமானங்களில் பணியாற்றும் பொறுப்பில் கடந்த ஆண்டு இணைக்கப்பட்டனர். இதனையடுத்து அவர்கள் பல்வேறு கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வந்தனர். 3 வார பயிற்சி முடிவடைந்த பின்னர் அடுத்த மாதம் 3 பெண் விமானிகளும் ராணுவ விமானமான மிக் 21 ஜெட் விமானங்களை இயக்குவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.