ரசிகர்கள் ஆவ்லோடு எதிர்பார்த்துவந்த மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் ‘மெர்சல்’ படக்குழுவினரோடு தனுஷ், பார்த்திபன், அபிராமி ராமநாதன், சுந்தர்.சி உள்ளிட்ட திரையுலகிர் பலரும் கலந்து கொண்டுள்ளார்கள்.
இவ்விழாவில் பேசிய ஆர்.பார்த்திபன், “ஓ.பி.எஸ்ஸும், ஈ.பி.எஸ்ஸும் இணைஞ்சா என்னாகும்னு தெரியாது. ஆனா விஜய்யும் அவரது ரசிகர்களும் இணைந்தால் விஜய் தான் இனி சி.எம். என்றார். உடனே ரசிகர்கள் கரவோஷம் எழுப்ப, கொஞ்சம் இடைவெளிவிட்டு சி.எம் னா கலெக்ஷன் வேறொன்னும் இல்ல என்றார். மேலும், விஜய் குறித்து ஒரு பஞ்ச் டயலாக் பேசிய அசத்தியவர், சில நாட்களுக்கு முன்பான டுவிட்டர் விவகாரத்தில் சரியாக நடந்துகொண்டதாகப் பாராட்டினார்.
பின்னர் தனுஷ் பேசுகையில், “தேனாண்டாள் பிலிம்ஸின் 100-வது படமாகவும், விஜய் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரின் 25-வது ஆண்டாகவும் அமைத்திருப்பதில் மகிழ்ச்சி. விஜய்யின் நண்பராகவும், ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகனாகவும் கலந்து கொண்டுள்ளேன். விஜய்யிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம். நம் தோளில் கைப் போட்டு பேசுவார். அதே போல் அவரது தோளில் கை போடவிட்டும் பேசுவார். இது போன்றதொரு குணம், நல்ல மனசு இருக்கும் நண்பனால் தான் முடியும்.
ஒரு இரும்பு சுத்தியலால் அடிவாங்கி கத்தியாக மாறி ஷார்ப்பாக இருக்கிறார். விஜய் இங்கு மிகவும் அமைதியாக உட்கார்ந்திருக்கிறார். அந்த அமைதி எனக்கு மிகவும் பிடிக்கும். உலகிலேயே அமைதி தான் மிகச்சிறந்த ஆயுதம் என்று சொல்வார்கள். அதை விஜய்யிடமிருந்து கற்றுக் கொண்டேன். இந்த விழாவில் விஜய் ரசிகர்களை நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.
தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஹேமா ருக்மணி பேசும்போது, ‘எங்கள் நிறுவனத்தின் வரலாறை விஜய்க்கு முன், விஜய்க்குப் பின்’ என இரண்டாகப் பிரித்து எழுதலாம் என்றார்.