தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் கூட கிழக்கு மாகாணம் வடக்கு மாகாணத்துடன் இணையாமல் போனது ஏன்?

269

 

battiஅனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு கோரியும் கடந்த வெள்ளிக்கிழமை வடமாகாணத்தில் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக கவனஈர்ப்பு போராட்டமும் நடத்தப்பட்டது.
ஆனால் கிழக்கில் கடை அடைப்போ அல்லது பணிப்புறக்கணிப்போ எதுவும் நடைபெறவில்லை.
தமிழ் அரசியல் கைதிகளாக சிறைகளில் இருபவர்கள் தனியே வடமாகாணத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல. கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்களும் கணிசமான அளவு இருக்கிறார்கள். கிழக்கில் போர் நடந்த காலத்திலும் அதற்கு பின்னரும் கிழக்கில் கைது செய்யப்பட்ட பெருந்தொகையான தமிழ் இளைஞர்கள் இன்னமும் சிறைகளில் உள்ளனர்.

ஏனைய விடயங்களில் இணையாவிட்டாலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் கூட கிழக்கு மாகாணம் வடக்கு மாகாணத்துடன் இணையாமல் போனது ஏன்?
வடக்கில் பூரண ஹர்த்தால், கடைகள் பூட்டு, அலுவலகங்கள் இயங்கவில்லை, போக்குவரத்து ஸ்தம்பிதம் என செய்திகள் வெளியான சமகாலத்தில் கிழக்கில் ஹர்த்தால் இல்லை, அனைத்தும் வழமை போல இயங்கின என்ற செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த செய்திகளை பார்த்ததும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் தொடர்பு கொண்டு தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வடக்கில் கடையடைப்பு பணிப்புறக்கணிப்பு ஆளுநரின் அலுவலகத்திற்கு முன்னால் கவனஈர்ப்பு போராட்டம் நடைபெற்றிருக்கிறதே கிழக்கில் ஏன் நடைபெறவில்லை என கேட்டேன்.

இதனை ஏற்பாடு செய்தவர்கள் கிழக்கில் ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கவில்லையே என சொன்னார்.
பொதுவான பிரச்சினை ஒன்றில் கூட வடக்கு கிழக்கு இணைந்து நிற்கவில்லையே என அவரிடம் கேட்ட போது இந்த கேள்வியை ஏற்பாடு செய்தவர்களிடம் தான் கேட்க வேண்டும், எமது கட்சிக்கும் இந்த ஹர்த்தால் அழைப்புக்கும் தொடர்பு இல்லை என அவர் சொன்னார்.

இதன் பின்னர் இந்த ஹர்த்தாலுக்கான அழைப்பை யார் விடுத்தது, என தேடிய போது சம்பந்தப்பட்ட அமைப்புக்கள் வெளியிட்ட அறிக்கையும் அந்த அமைப்புக்களின் பெயர் பட்டியலும் ஒவ்வொரு அமைப்பின் சார்பிலும் ஒவ்வொருவர் இட்ட கையொப்பங்களும் காணப்பட்டன.
இந்த ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுத்து வெளியிடப்பட்ட அறிக்கையில் முதலாவது இருந்த பெயர் தமிழ் மக்கள் பேரவை, அதனை தொடர்ந்து சில பொது அமைப்புக்கள் மற்றும் சில அரசியல் கட்சிகளின் பெயர்களும் இருந்தன.

அரசியல் கட்சிகளின் வரிசையில் தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் பிரதான அரசியல் கட்சிகளான தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ( ஈ.பி.ஆர்.எல்.எவ் ) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ( புளொட் ) ஆகியன காணப்பட்டன. யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு, யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தமிழ் சிவில் சமூக அமையம், அகில இலங்கை சைவ மகா சபை ஆகிய பொது அமைப்புக்களின் பெயர்களும் காணப்பட்டன.

இந்த அமைப்புக்கள் வெளியிட்ட அறிக்கையின் இறுதியில் எதிர்வரும் 13.10.2017, வெள்ளிக்கிழமை, வடமாகாணம் தழுவிய முழுமையான கதவடைப்பினை மேற்கொள்ளுவதற்கு அனைத்து தமிழ் மக்களையும் நாம் உரிமையோடு அழைக்கின்றோம். அவசர மருத்துவ சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்துச் செயற்பாடுகளையும் முழுமனதோடு நிறுத்தி – நியாயத்தோடும் சாவோடும் போராடுகின்ற தமிழ் அரசியற் கைதிகளுக்கு எமது ஆத்ம பலத்தைக் கொடுப்போம்.

தமிழ் அரசியற் கைதிகளுக்கு நிரந்தர விடுதலை கிடைக்கும்வரை நாம் ஓயமாட்டோம் என்ற செய்தியை – இந்த நாட்டின் அரசாங்கத்திற்கும், எமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளுக்கும், இதன் பொறுப்புடைய ஒவ்வொரு தரப்புக்கும் உறுதியாகத் தெரிவிக்க எதிர்வரும் 13.10.2017, வெள்ளிக்கிழமை, காலை 09:30 மணிக்கு, வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக ஒன்றெனத் திரள்வோம். என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையை முழுமையாக வாசித்த பின்னர் பொறுப்பு வாய்ந்த இந்த அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் கிழக்கை ஏன் தவற விட்டார்கள் என்ற கேள்வி எழுந்தது.

இந்த ஹர்த்தாலுக்கான அறிக்கையை தமிழ் மக்கள் பேரவையே தயாரித்ததாக கூறப்படுகிறது. தமிழ் மக்கள் பேரவையின் அறிக்கைகளை எழுதுபவர் யார் என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழ் மக்கள் பேரவையின் முக்கிய நபராக இருக்கும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும்  பத்திரிகையின் ஆசிரியர் தான். இவருக்கு கிழக்கு என்றால் அறவே பிடிக்காது. தமிழரசுக்கட்சியின் செயலாளர் பதவி மட்டக்களப்பில் உள்ள துரைராசசிங்கத்திற்கு வழங்கப்பட்ட போது தமிழரசுக்கட்சியின் தலைமை பொறுப்புக்கள் கிழக்கிற்கு வழங்க கூடாது, வடக்கு அதனை கைப்பற்ற வேண்டும் என ஆசிரியர் தலையங்கம் எழுதியவர். அப்படி பட்ட ஒரு நபர் தயாரிக்கும் அறிக்கையில் கிழக்கிற்கு இடம் இருக்காது என்பது வெளிப்படையான உண்மை.

காலம் காலமாக தமிழ் அரசியல் கட்சிகளும் பொது அமைப்புக்களும் விடும் தவறு வடக்கை மனதில் கொண்டே தீர்மானங்கள் எடுப்பது, தமிழர் தேசம் என அழைக்கப்படும் வடக்கு கிழக்கு பிரதேசம் பற்றிய தீர்மானங்களை எடுக்கும் போது வடக்கை மையப்படுத்தியே வடக்கில் உள்ள தலைவர்களே அதனை எடுப்பார்கள் என்ற குற்றச்சாட்டு காலம் காலமாக கிழக்கில் உள்ளவர்களிடம் காணப்படுகிறது.

ஆனால் கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் அகிம்சைப் போராட்டங்களிலும் சரி ஆயுதப்போராட்ட காலங்களிலும் சரி முழமையான ஒத்துழைப்பை வழங்கியே வந்திருக்கிறார்கள்.

1956களில் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவரப்பட்ட போது அதில் பெருமளவு பாதிக்கப்பட்டது வடபகுதி குறிப்பாக யாழ்ப்பாண தமிழர்கள் தான். அப்போது கிழக்கில் கூட அரச உத்தியோகத்தர்களாக இருந்தவர்கள் வடபகுதி தமிழர்கள் தான். ஆரம்பகாலத்தில் கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் அரச உத்தியோகத்தை விட விவசாயத்திலேயே நாட்டம் கொண்டிருந்தனர். ஆனால் சிங்களம் மட்டும் சட்டத்திற்கு எதிராக கிழக்கில் ஒவ்வொரு கச்சேரிகளுக்கு முன்பாகவும் சத்தியாக்கிரக போராட்டங்கள் நடைபெற்றன. கிழக்கில் அறவழிப்போர் அரியநாயகம், இராசமாணிக்கம், இராஜவரோதயம், மாணிக்கம், இராசதுரை, போன்றவர்கள் இந்த போராட்டங்களை முன்நின்று நடத்தினர். கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் பெருமளவு கலந்து கொண்டனர்.

அது போல 1970களின் பின்னர் பல்கலைக்கழக தரப்படுத்தல் திட்டம் கொண்டுவரப்பட்ட போது யாழ்.மாவட்ட மாணவர்களே பாதிக்கப்பட்டனர். தரப்படுத்தலால் கிழக்கில் உள்ள மாணவர்கள் பாதிக்கப்படவில்லை, தரப்படுத்தலால் கிழக்கிற்கு ஓரளவு நன்மை கிடைத்தது என்றே சொல்ல வேண்டும், ஆனால் தரப்படுத்தலுக்கு எதிரான போராட்டங்களை இளைஞர்கள் முன்னெடுத்த போது கிழக்கில் உள்ள தமிழ் இளைஞர்களும் பெருமளவு பங்கு கொண்டனர். இந்த போராட்டங்களால் பல இளைஞர்கள் சிறைகளுக்கு சென்றனர்.

இவை எல்லாவற்றையும் விட ஆயுதப்போராட்டம் வடக்கில் தான் தோற்றம் பெற்றது என பெரும்பாலானவர்கள் கூறிவருகின்றனர். ஆனால் சிங்கள ஆக்கிரமிப்புக்கு எதிரான ஆயுதப்போராட்டம் முதலில் ஆரம்பமானது கிழக்கில் தான். 1956 கலவரங்களின் பின் சிங்கள பகுதிகளிலிருந்து தாக்க வந்த சிங்களவர்களை துறைநீலாவணை மக்கள் தாம் வைத்திருந்த கட்டுதுப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்தனர். இதுவே சிங்களவர்களுக்கு எதிரான ஆயுதப்போராட்டத்தின் முதல் நடவடிக்கையாகும்.

ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது சுமார் 30க்கு மேற்பட்ட ஆயுதக்குழுக்கள் உருவாகின. இவை அனைத்தும் வடக்கை சேர்ந்தவர்களையே தலைவர்களாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டன. இவற்றில் தமிழீழ விடுதலைப்புலிகள், புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்;.எவ், ஈரோஸ் ஆகிய ஐந்து இயங்கங்களே மிஞ்சின. இந்த இயக்கங்களில் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கிழக்கை சேர்ந்தவர்களே.

கிழக்கில் மட்டுமல்ல வடக்கில் நடந்த சண்டைகளிலும் பெருமளவிலான கிழக்கை சேர்ந்த போராளிகள் ஈடுபட்டனர். ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் ரெலோ இயக்கங்களை விடுதலைப்புலிகள் தடை செய்து அவர்கள் மீது தாக்குதல் நடத்திய போது கிழக்கை சேர்ந்த பல போராளிகள் வடக்கில் உயிரிழந்தனர்.

வடக்கை கைப்பற்றும் நோக்குடன் ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட போது முறியடிப்பு தாக்குதல்களிலும் ஓயாத அலைகள் தாக்குதல்களிலும் முன்னணியில் நின்றவர்கள் ஜெயந்தன் படை அணி என சொல்லப்படும் கிழக்கு போராளிகள் தான்.

ஆனாலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தமக்கான இடம் வழங்கப்படவில்லை என்ற ஆதங்கம் ஜெயந்தன் படைப்பிரிவு போராளிகளிடமும் ஏனைய போராளிகளிடமும் காணப்படுவது வெளிப்படையான உண்மை.

தமிழ் மக்களின் அறவழிப் போராட்டங்களிலும் ஆயுதப்போராட்டங்களிலும் தாம் முழுமையாக பங்களிப்பு செய்த போதிலும் அரசியல் தீர்மானங்கள் மற்றும் விவாதங்கள் என்று வரும் போது கிழக்கு பற்றி பெருமளவு கருத்தில் கொள்ளப்படுவதில்லை என்ற ஆதங்கம் கிழக்கில் உள்ள தமிழ் மக்களிடம் காணப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டை உண்மை என நிரூபிக்கும் வகையிலேயே தமிழ் மக்கள் பேரவை தலைமையிலான அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் நடத்திய வடக்கின் ஹர்த்தால் போராட்டம் அமைந்திருக்கிறது எனலாம்.

இந்த போராட்டத்தில் கிழக்கை அவர்கள் இணைத்து கொள்ளாமல் விட்டதற்கு சில காரணங்கள் இருந்திருக்கலாம்.

திருகோணமலை அம்பாறை மாவட்டங்களில் வர்த்தகம் மற்றும் போக்குவரத்து துறைகள் முஸ்லீம் மற்றும் சிங்களவர்களிடமே இருக்கிறது. திருகோணமலை நகரத்தில் மட்டும் மிக சொற்பமான அளவில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் உள்ளன. ஏனைய 90வீதமானவை முஸ்லீம்களுக்கும் சிங்களவர்களுக்கும் சொந்தமானவை.

அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை நகரம் முழுமையாக சிங்களவர்களின் கையில் உள்ளது. கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை நகரங்களின் வர்த்தகம் முழுமையாக முஸ்லீம்களின் கைகளில் உள்ளன.

எனவே தமிழர்களால் விடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு மற்றும் கடையடைப்பு போராட்டங்கள் திருகோணமலை அம்பாறை மாவட்டங்களில் வெற்றி பெறுவதில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பிரதான நகரங்களாக இருப்பவை மட்டக்களப்பு நகரம், காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி வாழைச்சேனை ஆகியன ஆகும். இவற்றில் மட்டக்களப்பு நகரத்தை விட காத்தான்குடியே அதிக வர்த்தக நிலையங்களை கொண்ட நகரமாக காட்சியளிக்கிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக படுவான்கரை போன்ற பிரதேசங்களில் உள்ள மக்கள் மட்டக்களப்பு நகரை விட காத்தான்குடி நகருக்கே சென்று பொருள்களை கொள்வனவு செய்கின்றனர்.

மட்டக்களப்பு நகர கடைகளில் இல்லாத பொருள்கள் காத்தான்குடி கடைகளில் உண்டு. மட்டக்களப்பு மாவட்டத்தின் பெருநகரமாக காத்தான்குடி நகரே காணப்படுகிறது.

மட்டக்களப்பு நகரின் வர்த்தகமும் இன்று முஸ்லீம்களின் கைகளுக்கு சென்று விட்டன. ஆயுதப்போராட்டம் ஆரம்பமாவதற்கு முதல் ( 1980களுக்கு முதல் ) மட்டக்களப்பு நகர வர்த்தகம் முழுமையாக தமிழர்களின் கைகளிலேயே இருந்தன. விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில முஸ்லீம் கடைகளே இருந்தன.
ஆயுதப்போராட்டம் ஆரம்பித்த பின்னர் தமிழ் இயக்கங்கள் தமிழ் வர்த்தகர்களை கடத்தி சென்று இலட்சக்கணக்கான பணத்தை அறவிட்டனர். அதன் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளும், அரச படைகளுடன் இணைந்து செயற்பட்ட ஏனைய தமிழ் இயக்கங்களும் தமிழ் வர்த்தகர்களிடம் மாதாமாதம் கப்பம் பெற்று வந்தனர்.

இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட தமிழ் இயக்கங்கள் மட்டக்களப்பு நகரில் அலுவலகங்களை கொண்டிருந்தன. இந்த அலுவலகங்களுக்கு ஒவ்வொருமாதமும் சென்று தமிழ் வர்த்தகர்கள் கப்பம் செலுத்தி வந்தனர். அதேநேரம் படுவான்கரையில் இருந்த விடுதலைப்புலிகளுக்கும் மாதமாதம் கப்பம் செலுத்தினர். புலிகளுக்கு பணம் கொடுப்பதாக இராணுவத்தினரும் தமிழ் வர்த்தகர்களை துன்புறுத்தினர்.
இதனால் தமது வர்த்தகத்தை தொடர்ந்து நடத்த முடியாமல் அவற்றை முஸ்லீம்களுக்கு விற்றனர்.

இதன் உச்சக்கட்டமாக ஒரு சம்பவம் நடைபெற்றது. 2004ல் விடுதலைப்புலிகளுக்கும் கருணாவுக்கும் பிளவு ஏற்பட்ட போது மட்டக்களப்பில் இருந்த யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ் வர்த்தகர்கள் வெளியேற்றப்பட்டனர். இதனால் இந்த தமிழர்கள் தமது வர்த்தக நிலையங்களை முஸ்லீம்களுக்கே விற்றனர்.
இதனால் இன்று மட்டக்களப்பு நகர வர்த்தகமும் முழுமையாக முஸ்லீம்களின் கைகளுக்கு சென்று விட்டது.
இதனால் தமிழ் அமைப்புக்கள் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றி பெறுவது குறைவு.

ஆனால் இதனை ஒரு காரணமாக தமிழ் மக்கள் பேரவை போன்ற அமைப்புக்கள் கூற முடியாது.

கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் சிக்கலான பிரச்சினைகளை வடக்கை தளமாக கொண்ட அமைப்புக்கள் புரிந்து கொள்ளவில்லை அல்லது அக்கறை காட்டவில்லை என காலம் காலமாக அம்மக்களால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை தமிழ் தலைவர்கள் இலகுவாக கடந்து செல்ல முடியாது.

SHARE