கட்டலான் பிரிவினைவாத தலைவர்கள் இருவர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக அந்த மாநிலத்தின் தலைநகர் பார்சிலோனாவில் ஆயிரக்கணக்கானோர் கூடி மெழுகுவர்த்தி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரிவினை செயற்பாடுகளில் ஈடுபட்டது தொடர்பில் விசாரணைக்கு உள்ளான ஜோர்டி சன்செஸ் மற்றும் ஜோர்டி குய்க்சார்ட் என்ற இரு தலைவர்களும் பிடியாணை இன்றி கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஒக்டோபர் 1 ஆம் திகதி இடம்பெற்ற சர்ச்சைக்குரிய சர்வஜன வாக்கெடுப்பில் முன்னின்று செயற்பட்டவர்களாக இவர்கள் இருந்தனர். இந்த வாக்கெடுப்பை ஸ்பெயின் மத்திய அரசு சட்ட விரோதமென அறிவித்தது.
மத்திய அரசின் நிலைப்பாட்டை ஆதரித்த ஸ்பெயின் அரசியலமைப்பு நீதிமன்றம் இந்த வாக்கெடுப்பு செல்லாதது என கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
எனினும் கைதி நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் சுதந்திர பயணத்தை தடுக்காது என்று கட்டலோனிய அரச பேச்சாளர் ஜோர்டி டுருல் குறிப்பிட்டுள்ளார்.
சரணடைவது பற்றி தமது அரசு பரிசீலிக்கவில்லை என்று அவர் கூறினார்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பார்சிலோனாவில் கூடிய சுதந்திரத்திற்கு ஆதரவானர்கள் மெழுகுவர்த்தியை ஏற்றி, நாங்கள் ஜோர்டிஸுடன் இருப்பதாக கோசம் எழுப்பினர். கட்டலான் பிராந்தியத்தின் ஏனைய நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
கட்டலோனிய தலைவர் கார்லஸ் புயிக்டெமொன்ட் ஏற்கனவே சுதந்திர பிரகடனத்தில் கைச்சாத்திட்டபோதும் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்காக அதனை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைத்தார்.
எனினும் இந்த பிரகடனத்தை கைவிடும்படி எச்சரித்திருக்கும் மத்திய அரசு இல்லாவிட்டால் அந்த மாநிலத்தின் அதிகாரத்தை கைப்பற்றுவதாக குறிப்பிட்டுள்ளது.