ஆப்கானிஸ்தானின் தெற்கு கந்தஹாரில் உள்ள இராணுவ தளம் ஒன்றின் மீது தலிபான்கள் நேற்று நடத்திய பாரிய தாக்குதல் ஒன்றில் குறைந்தது 43 ஆப்கான் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
இரு தற்கொலை கார் குண்டு தாக்குதலுடன் ஆரம்பமான இந்த மோதலில் துப்பாக்கிச் சண்டை பல மணி நேரம் நீடித்தது.
இதனால் 60 படையினர் உள்ள இந்த இராணுவத் தளத்தில் 43 வீரர்கள் கொல்லப்பட்டதோடு ஒன்பது பேர் காயமடைந்தும் மேலும் அறுவர் காணாமல்போயுமுள்ளனர். தலிபான்கள் இந்த முகாம் மீது நடு இரவில் நுழைந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மைவான்த் மாவட்டத்தின் சாஷ்மோ முகாமில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் குறைந்தது 9 தலிபான்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கானில் இந்த வாரத்தில் இராணுவ நிலை மீது தாக்குதல் நடத்தும் மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும். தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் செவ்வாயன்று இடம்பெற்ற தாக்குதலில் 80 பேர் கொல்லப்பட்டு 300 பேர் வரை காயமடைந்ததோடு இது கடந்த ஐந்து மாதங்களில் ஆப்கானில் இடம்பெற்ற மோசமான தாக்குதலாக இருந்தது.
இந்நிலையில் ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தலிபான்கள் நேற்றை தாக்குதலுக்கு பெறுப்பேற்றுள்ளனர்.
தாக்குதல்தாரிகள் வெடிபொருள் நிரப்பப்பட்ட டிரக் வண்டி ஒன்றை வெடிக்கச் செய்து இராணுவ வாளாகத்தை தரைமட்டமாக்கி இருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் தெளலத் வசிரி குறிப்பிட்டுள்ளார்.
“துரதிருஷ்டவசமாக முகாமுக்குள் எதுவும் மிஞ்சவில்லை. உள்ளே அனைத்தையும் அவர்கள் எரித்து சாம்பலாக்கியுள்ளனர். நிலைமையை மதிப்பீடு செய்ய குழு ஒன்றை நாம் அனுப்பியுள்ளோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
2014 முடிவுடன் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் ஆப்கானில் தமது போர் நடவடிக்கைகளை உத்தியோகபூர்வமாக முடிவுக்கு கொண்டுவந்ததை தொடர்ந்து தலிபான்களின் தாக்குதல்களை கையாள்வதில் ஆப்கான் இராணுவம் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.