திரையைத் தாண்டிய நட்பு.!

301

80களில் கொடிகட்டிப் பறந்த தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒன்று கூடி தங்களது நட்பை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தொடர்ந்து 8 வது ஆண்டாக இந்த ஆண்டும் ஒன்று கூடியுள்ளனர்.

கிழக்கு கடற்கரை சாலையின் மாமல்லபுரம் அருகில் உள்ள இண்டர்காண்டினண்டல் ரிசார்ட்டில் இந்த ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெற்றது. நவம்பர் 18-19 என இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஊதா நிறம் அவர்களின் சந்திப்புக்கான தீம் நிறமாக கடைபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கலந்துகொண்ட பிரபலங்கள் அனைவரும் ஊதா நிற உடையணிந்து கலந்து கொண்டனர். அந்த பகுதி முழுவதும் ஊதா நிற பூக்கள் மற்றும் கலை பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

சிரஞ்சீவி, சரத்குமார், வெங்கடேஷ், பாக்யராஜ், ரேவதி, குஷ்பு, சுரேஷ், ரம்யா, சுமலதா, நரேஷ், ராதிகா, அம்பிகா, ராதா ஜாக்கி ஷ்ரோப் உட்பட 28 பேர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் முதல் நாள் அன்று பாட்டுப்போட்டி, ராம்ப் வாக் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. அதன் பின்னர் இரண்டாவது நாளாகத் தொடர்ந்த இந்த சந்திப்பில் ஆன்மீகம் உள்ளிட்ட சில தலைப்புகளின் கீழ் கருத்து விவாதங்கள் நடைபெற்றன. இந்த சந்திப்பிற்கு பின்னர் அதில் கலந்து கொண்ட அனைவரும் ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இவர்களை பின்பற்றி கடந்த சில வருடங்களாக 90களில் திரையுலகில் அறிமுகமான பிரபலங்கள் ஒன்றுகூடல் நிகழ்வினை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

SHARE