கார்த்தி நடித்து வெளியான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தைப் பலரும் பாராட்டி வருகையில் இயக்குநர் ஷங்கரும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
வினோத் இயக்கத்தில் கார்த்திக், ரகுல் பிரீத் சிங் நடிப்பில் நவம்பர் 17ஆம் தேதி வெளியான திரைப்படம் தீரன் அதிகாரம் ஒன்று. பவுரியா கொள்ளைக் கூட்டத்தை பிடிக்கத் தமிழகக் காவல் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
கார்த்தி நடித்திருந்த தீரன் திருமாறன் கேரக்டருக்குக் காவல் துறையினர் மட்டுமல்லாது பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர். இந்த நிலையில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் திகிலூட்டும் காவல் துறை சம்பந்தமான திரைப்படம். உணர்ச்சியின் விளிம்பில் நகம் கடிக்க வைத்தது. முழு விவரங்களுடன் கூடிய இயக்குநர் வினோத்தின் சிறந்த முயற்சி. கார்த்தி, ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் மற்றும் மொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்” எனப் பாராட்டு தெரிவித்துள்ளார்.