அருந்ததி, பாகுபலி, ருத்ரமாதேவி என எப்போதும் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பவர் அனுஷ்கா. அப்படி தனக்கென்று ஒரு பிரமாண்ட மார்க்கெட் கொண்ட இவர் இந்த முறை பாகமதியாக களத்தில் இறங்கியுள்ளார், அருந்ததீ போல் இதிலும் மிரட்டினாரா? பார்ப்போம்.
கதைக்களம்
ஊரில் எல்லோருக்கும் மிகவும் நல்லது செய்யும் அமைச்சராக இருக்கின்றார் ஜெயராம், நல்லவர் என்றாலே பிரச்சனை, அதிலும் அரசியல்வாதியாக இருந்து நல்லது செய்தார் பிரச்சனை வராதா என்ன!.
ஜெயராம் விட்டால் சிஎம் ஆகிவிடுவார் என்று பயந்து ஒரு சிலர் ஜெயம்ராம் நற்பெயரை கெடுக்க முயற்சிக்கின்றனர். அதற்காக ஜெயராமிடம் உதவியாளராக இருந்து, ஒரு கொலைக்குற்றத்திற்காக ஜெயிலில் இருக்கும் அனுஷ்காவை ஒரு பங்களாவில் வைத்து ஆஷா சரத் விசாரிக்கின்றார்.(ஜெயராமை கெட்டவர் என்று காட்ட அனுஷ்காவின் மூலம் ஏதாவது தகவல் கிடைக்குமா என்பதற்காக).
ஆனால், அனுஷ்காவிடமிருந்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை, அதேசமயத்தில் அந்த பங்களாவில் பல அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்க, அதை தொடர்ந்து என்ன ஆனது? அந்த அமானுஷ்யம் என்ன? என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
அனுஷ்கா நன்றாக நடித்துள்ளார் என்று இந்த படத்தில் நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை, அவர் இதேபோல் பல படங்களில் பல கதாபாத்திரங்கள் செய்துவிட்டார், ஆனால், அருந்ததியில் இருந்த வீரம், கம்பீரம் இதில் கொஞ்சம் மிஸ்ஸிங், உடல் எடை ஒரு காரணமா என்று தெரியவில்லை, இருந்தாலும் தனக்கான கதாபாத்திரத்தில் அனுஷ்கா கலக்கியுள்ளார்.
ஆஷா சரத் ஏற்கனவே பாபநாசம் படத்தில் பார்த்து இருப்பீர்கள், அந்த படத்தில் கமல், இதில் அனுஷ்கா அதே விசாரணை வேலையை தான் இதிலும் செய்கின்றார், ஒரு தகவல் கூட கிடைக்காத இடத்தில் ஆஷாவிற்கு திடிரென்று தோன்றும் யோசனை அதை வைத்து அவர் செய்ய முயற்சிக்கும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றது.
படத்தின் முதல் பாதி அனுஷ்கா பங்களாவை ஏதோ திருவிழாவிற்கு வந்த குழந்தை போல் நோட்டமிடுகின்றார், அட பேயே காட்டுங்கப்பா என்று நாமே கேட்கும் வரை செல்கின்றது காட்சிகள், ஆனால், ஒரு இடத்தில் பேய் வர அதை தொடர்ந்து படம் பரபரப்பாகின்றது.
படத்தில் அதிக பாடல்களை தவிர்த்த விதம் சூப்பர், கிராபிக்ஸ் காட்சிகளும் நன்றாகவே உள்ளது, மதியின் ஒளிப்பதிவில் நாமே ஒரு சில காட்சிகளில் பங்களாவில் பயணித்த அனுபவம், தமனின் பின்னணி இசை மிரட்டல்.
க்ளாப்ஸ்
அனுஷ்கா, ஜெயராம், ஆஷா சரத் நடிப்பு.
படத்தின் இடைவேளை காட்சி, மற்றும் அவ்வபோது வரும் டுவிஸ்ட், குறிப்பாக கிளைமேக்ஸ்.
ஒளிப்பதிவு, தமனின் பின்னணி இசை.
பல்ப்ஸ்
படத்தின் முதல் பாதி அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கும் வரை கொஞ்சம் மெதுவாகவே செல்கின்றது.
மொத்தத்தில் அருந்ததி அளவிற்கு இல்லை என்றாலும் இந்த பாகமதியும் உங்களை ஏமாற்றமாட்டார்.