புலனாய்வுப்பிரிவினரின் அழுத்தங்களையும் மீறி சமூகமளித்த மக்கள். தண்டுவானில் சந்திப்புகளை ஏற்படுத்தி குறைகளை கேட்டார் ரவிகரன்.

352

புலனாய்வுப்பிரிவினரின் அழுத்தங்களையும் மீறி தண்டுவான் வாழ்மக்கள், ரவிகரனின் மக்கள் குறைகேள் சந்திப்பில் கலந்துகொண்டு பிரதேசத்தின் குறைகளை எடுத்துரைத்த சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது.
இன்று காலை பத்து மணியளவில் ஆரம்பமான இச்சந்திப்பில் அடைமழையையும் பொருட்படுத்தாது புலனாய்வுப்பிரிவினரின் அழுத்தங்களையும் மீறி, மக்கள் கலந்து கொண்டு குறைகளை எடுத்துக்கூறியிருந்தனர்.
இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,
ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்குட்பட்ட தண்டுவான், பழம்பாசி, பெரிய இத்திமடு பகுதிமக்கள் தமது குறைகள் கோரிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடலுக்கு மக்கள் சந்திப்பொன்றை ஏற்படுத்துமாறு வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனிடம் கடந்த வாரம் கேட்டிருந்தினர்.
அந்தவகையில், இன்றையதினம் காலை பத்துமணிக்கு ஏற்பாடாகியிருந்த இம்மக்கள் குறைகேள் சந்திப்பில், கனமழையையும் பொருட்படுத்தாது கலந்துகொண்ட மக்கள் தமது பிரதேசங்களில் உள்ள பல்வேறு குறைகளையும் எடுத்துரைத்து அவற்றுக்கான தீர்வை பெற்றுத்தருமாறு கோரியிருந்தனர்.
இந்நிலையில் அவ்விடத்திற்கு விரைந்த புலனாய்வுப்பிரிவினர், தண்டுவான் பொதுநோக்கு மண்டபத்திற்கு வெளியில் நின்று மக்கள் சந்திப்பை கண்காணித்துக்கொண்டிருந்ததோடு ஐந்துக்கு மேற்பட்ட இராணுவ உடை தரித்த படையினரும் அவ்விடத்திற்கு வருகை தந்து ஆங்காங்கே நின்று மக்கள் குறை கேள் சந்திப்பில் பங்கெடுத்த அப்பிரதேச வாழ் மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்திய வண்ணம் இருந்தனர்.
எழுத்துமூலமும் வாய்மொழி மூலமும் தெரிவிக்கப்பட்ட குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பில் தனது ஆலோசனகளை வழங்கிய ரவிகரன் அவை தொடர்பாக சம்பந்தப்பட்ட திணைக்களங்களையும் தொடர்புகொள்வதாக அம்மக்களுக்கு உறுதியளித்தார்.
அதனைத்தொடர்ந்து மக்கள் சந்திப்பை நிறைவு செய்த ரவிகரன், அவர்களின் கோரிக்கைகளுக்கு அமைய,  பெரிய இத்திமடு, தட்டாமலை, தண்டுவான், பழம்பாசி, கரடிப்பிலவு, 17ம் கட்டை, மாமடுச்சந்தி ஆகிய கிராமங்களில் உள்ள வீதிகள், குளங்கள், பாடசாலை, விளையாட்டு மைதானம் என பல இடங்களையும் மக்கள் பிரதிநிதிகளுடன் பார்வையிடச்சென்றார்.
வழிநெடுகிலும் ரவிகரனை புலனாய்வுப்பிரிவினர் பின்தொடர்ந்ததோடு குறைகேள் சந்திப்பில் கலந்துகொண்ட மக்களிடம் இராணுவத்தினர் விசாரணை செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் மேற்குறிப்பிட்ட பிரதேச மக்களின் சுகாதார நலன் கருதி வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் ஏற்கனவே இப்பகுதி மக்களால் கேட்டுக்கொண்டதற்கமைய வைத்திய நடமாடும் சேவை ஒன்றை தண்டுவான் பகுதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏற்பாடு செய்தமை தொடர்பில் அப்பகுதி மக்கள் நன்றிகளையும் தெரிவித்திருந்தனர்.
3   4
5   6
SHARE