தாய்லாந்தில் நடைபெற்று வரும் சர்வதேச நீச்சல் போட்டியில் கலந்துகொண்ட நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்தி சினிமாவுலகிலும் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டிருக்கிறார் மாதவன். அவர் குத்துச் சண்டை பயிற்சியாளராக நடித்த ‘இறுதிச்சுற்று’ மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதில் உணர்வுபூர்மாக நடித்திருந்த அவரது கதாபாத்திரம் பாராட்டுகளைப் பெற்றது.
விளையாட்டுத் துறையிலும் ஆர்வம்கொண்ட மாதவனின் மகன் வேதாந்த், நீச்சல் வீரர் என்பது பலருக்கும் தெரியாத ஒன்றாக இருந்தது. இந்த நிலையில் தாய்லாந்து நாட்டில் நடைபெற்றுவரும் சர்வதேச நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட வேதாந்த், பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 1500 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவில் கலந்துகொண்ட வேதாந்த், மூன்றாவதாக வந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இந்தியாவுக்காக அவர் வெல்லும் முதல் பதக்கம் இதுவாகும். இதனால் மாதவனும் அவரது மனைவி சரிதாவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இது குறித்து மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “வேதாந்த் இந்தியாவுக்காக முதல் பதக்கத்தை வென்றுள்ளான். இது சரிதாவுக்கும் எனக்கும் பெருமையான தருணம். அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
திரையுலகப் பிரபலங்களும் விளையாட்டுத் துறை சார்ந்தவர்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வேதாந்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.