உங்க எலும்பு எப்படி? சோதித்துப் பார்க்கலாம் வாங்க

194

images

 

வயதாக ஆக சிலருக்கு பல பிரச்னைகள், பலருக்கு சில பிரச்னைகள் இருக்கலாம். ஆனால் எல்லோருக்கும் பொதுவான பிரச்னை என்னவென்றால் எலும்பு சார்ந்த பிரச்னைகள் எனலாம். 50 வயதுக்குமேல் நாம் வெளிப்பார்வைக்கு ஆரோக்கியமாகத் தென்பட்டாலும், உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறையுடன் இருக்க வேண்டிய காலகட்டம் அது.

ஆஸ்டியோபொராஸிஸ் (osteoporosis) போன்ற வியாதிகள் அறிகுறியே காட்டாமல் திடீரென்று தாக்கிவிடக் கூடும். எனவே கூடுமானவரையில் எச்சரிக்கையுடன் இருப்பதுதான் நல்லது. அதுவும் குறிப்பாக பெண்கள் மேலும் கவனத்துடன் இருப்பது நலம். ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினர் என யாராக இருந்தாலும் அவரவர் உடல் ஆரோக்கியத்தில் அக்கறையுடன் இருந்தால் மருத்துவமனை செலவுகளை மிச்சப்படுத்தலாம்.

சுறுசுறுப்பான நடைபயிற்சி

காலை, மாலை, இரவு என தினமும் 10 நிமிடங்கள் நடைபயிற்சிக்காக நீங்கள் செலவழிக்க வேண்டும். வாக்கிங் அல்லது ரன்னிங் என எதில் உங்களுக்கு ஆர்வம் உள்ளதோ அந்த பயிற்சியை செய்யுங்கள். இதனை வெயிட் பேரிங் எக்ஸர்ஸைஸ் (Weight-bearing exercise) என்கிறார்கள் உடற்பயிற்சி நிபுணர்கள். இதில் முக்கியமானது என்னவென்றால் உங்கள் பாதம் பூமியில் நன்றாக அழுத்தமாக பதிய வேண்டும். அப்போதுதான் உடல் தசைகள் வலுவாகும். நீச்சல் பயிற்சி செய்வதும் மிகவும் நல்லது. 19 லிருந்து 49 வயதுள்ளவர்கள் ஏரோபிக் பயிற்சிகளில் தினமும் ஈடுபடலாம்.

புகைப் பழக்கம் வேண்டாம்

எலும்பு ஆரோக்கியத்துக்கு முக்கிய எதிரி புகை பிடிக்கும் பழக்கம். இளம் வயதில் புகைக்க ஆரம்பித்தவர்கள் வயதாக ஆக எலும்புப் பிரச்னைகளை எதிர் கொள்ள நேரும். நீண்ட கால புகைக்கும் பழக்கமுடையவர்களுக்கு ஆஸ்டியோபொராஸிஸ் வர அதிக வாய்ப்புள்ளது. பெண்களைப் பொருத்தவரை மெனோபாஸ் காலகட்டத்துக்குப் பிறகு ஈஸ்ட்ரோஜென் எனும் ஹார்மோன் சுரப்பு குறைந்து ஒருகட்டத்தில் நின்றுவிடும். அப்போது எலும்புத் தேய்மானங்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

உடல் எடை குறைக்காதீர்கள்

உங்கள் உயரத்துக்கு ஏற்ற எடையுடன் இருப்பது முக்கியம் அதே சமயம் எலும்புகள் வலுவுடன் இருப்பதும் முக்கியம். எனவே எடை குறைப்புச் சாதனை செய்கிறேன் பேர்வழி என்று எலும்பும் தோலுமாக மாறி விடாதீர்கள். சிலர் உடல் எடையை குறைக்க உணவைக் குறைத்துக் கொள்வார்கள். இது அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதித்துவிடும்.

உடல் பருமன் பிரச்னைகளுக்கு தகுந்த மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்ற பின்புதான் டயட்டிங், உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடவேண்டும். சுய மருத்துவம் எந்தளவுக்கு ஆபத்தோ அதே போலத்தான் சுயமாக எடை குறைப்பு விஷயங்களில் ஈடுபடுவதும். சத்துப் போதாமை ஏற்பட்டு எலும்பு வரை அந்த பாதிப்புக்கள் நீடிக்கும். எனவே பத்திரிகையில் படித்தும், ஆன்லைனில் பார்த்தும் கண்டடைந்த குறிப்புகளையும் பின்பற்றத் தொடங்கினால் உடல் எடை வேண்டுமானாலும் குறையலாம். ஆனால் உடல் மெலிந்து, எலும்புத் தேய்மானமும் இலவச இணைப்பாக சேர்ந்து வந்துவிடக் கூடும்.

ஹார்மோன் பிரச்னைகள்

ஆண்களை விட பெண்களுக்குத் தான் எலும்புத் தேய்மானப் பிரச்னைகள் அதிகம் ஏற்படுகிறது. மெனோபாஸ் உள்ளிட்ட காரணங்களால் அவர்கள் இதனை எதிர்கொள்ள போதிய அளவுக்கு ஊட்டச் சத்துக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் 700 மில்லிகிராம் கால்ஷியமும் 10 மைக்ரோ கிராம் அளவு வைட்டமின் டி உங்கள் எலும்புகள் பலமாகவும் உறுதியாகவும் இருப்பதற்குத் தேவை. எனவே கால்ஷியம் மற்றும் வைட்டமின் டி சத்துள்ள உணவுகளை மருத்துவரின் பரிந்துரைப்படி சாப்பிடுங்கள். அதற்காக அதிகப்படியான கால்ஷியம் உடலில் சேர்வதும் ஆபத்துதான். இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆரோக்கியமான சமச்சீரான உணவுதான் சிறந்தது. வைட்டமின் டி சூரிய ஒளியினால் 90 சதவிகிதம் கிடைத்துவிடும். 10 சதவிகிதம் மீன் உள்ளிட்ட சத்தான உணவின் மூலம் கிடைக்கும்.

SHARE