அனர்த்த  முகாமைத்துவ அமைச்சு மூலம் மலையகத்தில் 2600 வீடுகள் அமைக்க முடிவு 

216
(பா.திருஞானம்)
அனர்த்த  முகாமைத்துவ அமைச்சு மூலம் மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்தில் 1200 வீடுகளும், பதுளை மாவட்டத்தில் 1400 வீடுகளும், மொத்தமாக 2600 வீடுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றார் அனர்த்த முகாமைத்தவ இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட  வெதமுல்லை தோட்டம் லில்லிஸ்டாண்ட் பிரிவில்  மண் சரிவு அச்சம் காரணமாக 105 குடும்பங்களை சேர்ந்த 353 பேர் குறித்த வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு  தற்போது தற்காலிகமாக இறம்பொடை இந்து கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை பார்வையிட விஜயம் செய்த போது ஊடகங்களுக்கு கருத்த தெரிவிக்கையிலேயே மேற்படி கருத்தினை தெரிவித்தார் இராஜாங்க அமைச்சர்.
இந்த விஜயத்தில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்                       எம் .திலகராஜ்,  மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.சிறிதரன், கொத்மலை பிரதேச செயலாளர், நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரி உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். இதன் போது பாதிக்கப்பட்ட 105 குடும்பங்களை சேர்ந்த 353 பேருக்கு  உலர் உணவு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.
தொடர்ந்து கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 20 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 16 பேர் அலட்சிய போக்கு காரணமாகவும், சீரற்ற காலநிலை அறிவுறுத்தல்களை பின்பற்றாததினாலாகும்.
மேலும்  04 பேர்  அனர்த்தத்தில் இறந்துள்ளனர். எனவே அரசாங்கம் மழை காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளைப் பின்பற்றி உயிர் சேதங்களை தவிர்த்துக்கொள்ளவும் என்று கூறினார்.
SHARE