வவுணதீவில் சுமார் 1500 இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வழங்கும் தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும் – பா.உ எஸ் வியாழேந்திரன் நடவடிக்கை

230

வவுணதீவில் சுமார் 1500 இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வழங்கும் தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும் பா.உ எஸ் வியாழேந்திரன் உடனடி நடவடிக்கை.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பகுதியில் கட்டிட பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையொன்றை அமைப்பதற்கான நடவடிக்கையினை மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக மேற்கொண்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

இன்று 27 ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பில் உள்ள அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அண்மையில் மீள்குடியேற்ற அமைச்சரை சந்தித்து விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இந்த தொழிற்சாலை அமைப்பற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வவுணதீவு பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ளதாகவும் அதற்கான காணி தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் மிக விரைவாக தொழிற்சாலை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த தொழிற்சாலை மூலம் கட்டிட நிர்மாணிப்புக்கான பொருட்கள் உற்பத்திசெய்யப்படவுள்ளதுடன் இந்த தொழிற்சாலையில் மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த சுமார் 1500 இளைஞர் யுவதிகள் தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைப்பதற்காக 6500 வீடுகள் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றிற்கான பொருட்களும் இந்த தொழிற்சாலையிலேயே உற்பத்திசெய்யப்படவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்தார்.

இதேபோன்று ஏறாவூர்ப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட இலுப்படிச்சேனையில் இயங்கிவந்த ஓட்டு தொழிற்சாலையினை மீள இயங்கச்செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் சனிக்கிழமை அது தொடர்பில் நடவடிக்கையெடுப்பதற்கு விசேட குழுவினர் வரவுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் முடிந்தளவு தம்மாளான அபிவிருத்திகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

SHARE