நுவரெலியா மாவட்ட அனர்த்த வீட்டு சேதம் 1264 மில்லியன் -பாதிப்புக்கு தற்காலிக நிரந்தர தீர்வுகளுக்கு முன்னுரிமை –
நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானம்
நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்று (28) நுவரெலியா மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் ரோகன புஸ்பகுமார தலைமையில் நடைபெற்றது. இதன் போது இணைத் தலைவர்களான மத்திய மகாண முதல் அமைச்சர் சரத் ஏக்கநாயக்க, இனைத்தலைவர் கே.கே.பியதாச உட்பட அனர்த்த முகாமைத்தவ இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம்¸ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ் சி.பி.ரத்னாயக்க, அனர்த்த முகாமைத்தவ அமைச்சின் செயலாளர், மத்திய மாகாண விவசாய மற்றும் கல்வி அமைச்சர் எம். ரமேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.ராஜாராம், ஏ.சக்திவேல் பிலீப்குமார், சோ.சிறிதரன், எஸ்.பி.ரத்நாயக்க உட்பட பிரதேச நகர சபை தலைவர்கள், அரச நிறுவனம் திணைக்களங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.



இந்த கூட்டத்தில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்தம் தொடர்பிலும், அதற்கான திர்வுகள் நிவாரணம் பெற்றுக் கொடுத்தல் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டது. அதன் படி நுவரெலியா மாவட்டத்தில் அனர்த்த வீட்டு சேதம் 1264 மில்லியன் என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நிதியினை பெற்று உடனடியாக தற்காலிக மற்றும் நிரந்தர தீர்வுகளாக வீடுகள் அமைக்க தீர்மானம் எட்டபட்டள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் பாதிப்படைந்த மக்களுக்கு 1200 வீடுகள் அமைக்கப்படவுள்ளது. இதனை அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மூலம் நிர்மாணிக்குமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் கேட்டுக் கொண்டதற்கு இனங்க அனர்த்த முகாமைத்தவ இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார அவர்கள் அதனை நடைமுறைபடுத்தவதாக கூறினார். தொடர்ந்து ஏனைய பாதிப்புகளும் இனங்கானப்பட்டு அவற்றுக்கும் தற்காலிக மற்றும் நிரந்தர தீர்வுகளை உடனடியாக பெற்றுக்கொடுக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதுடன் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.சிறிதரனின் முன்மொழிவுக்க அமைய எதிர்காலத்தில் மண் சரிவுகள் அனர்த்தங்கள் ஏற்பட்டால் அந்த அந்த பிரதேச செயலங்கள் ஊடாக உடனடியாக நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க கிளைகள் அமைப்பதற்கான திர்மானம் எட்டப்பட்டுள்ளது.
தற்போது மண்சரிவு அனர்த்திற்கும் போதிய வசதி இன்றியும் காணப்படும் லிந்துலை வைத்தியசாலையை பொருத்தமான இடத்திற்கு மாற்றுவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.மயில்வாகனம் அபிவிருத்தி குழு கூட்டத்தில் முன்மொழிந்ததற்கு ஏற்ப அதனை பிரிதொரு பாதுகாப்பான இடத்தில் வைத்தியசாலையை மாற்றுவதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நாகசேன பகுதியில் லிந்துல வைத்தியசாலை அமைக்கப்படும். மத்திய மாகாண விவசாய மற்றும் கல்வி அமைச்சர் எம். ரமேஸ்வரன் அவர்களின் முன்மொழிவுக்கு அமைய வௌண்டன் தோட்டத்தில் பாதிப்புக்கு உள்ளாகி உள்ள 67 குடும்பத்திற்கும் மடங்கும்புர பிரதேசத்தில் பாதிப்புக்கு உள்ளான 20 குடும்பத்திற்கும் நிவராணம் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் முன்மொழிவுகள் வைக்கப்பட்டு அதற்கான தீர்வுகள் பெறப்பட்டன.
தென்மேல் பருவகாற்று நுவரெலியா மாவட்டத்தில் உக்கிரமடைந்ததால் 375 குடும்பங்களை சேர்ந்த 1445 பேர் பாதிப்படைந்துள்ளனர். 01 மரணம் நிகழ்ந்துள்ளது. முழுமையான வீட்டு சேதம் 05. பகுதி அளவிலான வீட்டு சேதம் 96. முகாம்களின் எண்ணிக்கை 11. குடும்பங்கள் 176. அங்கத்தினர் 599. உறவினர் வீடுகள் 154. குடும்பங்களை சேர்ந்த 621 பேர் இருக்கின்றனர். பகுதி அளவில் 45 வீடுகள் உடைந்து, 255 பேர் பாதிப்படைந்து உள்ளனர். அனர்த்த கட்டுப்பாட்டு செயற்திட்டங்கள் 37 இணங்கானப்பட்டு அதன் பெறுமதி 23.3 மில்லியன் என இனம் காணப்பட்டுள்ளது.
(பா.திருஞானம்)