அண்மையில் தமிழகம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட போது மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக 13 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் விடுதலைப்புலிகளின் பங்கு முக்கியமானது” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வன்முறை சம்பவங்களுக்கு பின்புலமாக இருந்த அரசியல் குறித்து சுப்பிரமணியன் சுவாமி கேள்வியெழுப்பியுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், “99 நாட்கள் அமைதியாக நடந்த போராட்டம் 100வது நாளன்று திடீரென வன்முறை கலவரமாக மாற்றப்பட்டது எப்படி? ஆட்சியர் அலுவலகம் முன்பு கூடுவதாக திட்டமிட்டிருந்த போராட்டக்காரர்கள் ஏன் அங்கு நிற்கவில்லை?
144 பிரிவு மீறலுக்காக பொலிஸார் முதலிலேயே ஏன் அவர்களைக் கைது செய்யவில்லை? கூட்டம் வன்முறையில் இறங்கியதும் பொலிஸார் போராட்டக்காரர்களைக் குறி பார்த்து சுட்டனர்.
இதற்கு முன்பு தண்ணீரைப் பீய்ச்சி பொலிஸார் ஏன் கூட்டத்தைக் கலைக்கவில்லை? துப்பாக்கி சூட்டின் போது பொலிஸார் ஏன் இரப்பர் குண்டுகளை பயன்படுத்தவில்லை?
எனக்கு கிடைத்த தகவலின்படி பொலிஸார் மத்தியிலும் விடுதலை புலிகள் ஊடுருவி இருக்கலாம் என்ற ஐயம் ஏற்பட்டுள்ளதாக” சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் சுப்பிரமணியன் சுவாமி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பகத்தில் பதிவொன்றை இட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.