ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் எதிர்வரும் 2020ம் ஆண்டு தை மாதம் நிறைவடைகின்றது. அதேவேளை, நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் 2020ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முடிவடைகின்றது.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றதா என்பதை அறிய சட்ட நிபுணர்களின் ஆலோசனை பெறப்படவுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, நான்கரை ஆண்டுகள் முழுமையாக கழிந்ததன் பின்னரே நாடாளுமன்றத்தை ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தினைக் கொண்டு கலைக்க முடியும்.
இந்நிலையில் ஜனாதிபதி தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியுமா? என்பது குறித்து சட்ட நிபுணர்களின் ஆலோசனை பெறப்படவுள்ளது.
அவர்களின் முடிவுகளின் பின்னரே இது தொடர்பாக ஆராயப்படும் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.