கிளிநொச்சி – கிராஞ்சி, இலவங்குடா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்திய இழுவை படகுகளில் எண்ணெய் கசிவு காரணமாக கடல் வாழ் உயிரினங்கள் அழிவடையும் ஆபத்து

516

கிளிநொச்சி – கிராஞ்சி, இலவங்குடா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்திய இழுவை படகுகளில் எண்ணெய் கசிவு காரணமாக கடல் வாழ் உயிரினங்கள் அழிவடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இந்த பகுதியில் தொழில் செய்ய வேண்டிய 45 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் கடற்தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இது தொடர்பில் அப்பகுதியை சேர்ந்த கடற்தொழிலாளர்கள் மேலும் கூறுகையில்,

மன்னார் மற்றும் யாழ்., கிளிநொச்சி ஆகிய கடற்பகுதிகளில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 35 இற்கும் மேற்பட்ட இந்திய இழுவை படகுகள் பிடிக்கப்பட்டு நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக இலவங்குடா கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளில் இருந்து எண்ணெய் கசிவதன் காரணமாக குறித்த கடற்பகுதியில் உள்ள கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் மீன்கள் தினமும் உயிரிழந்து வருகின்றன.

இந்த பகுதியில் சிறகுவலை, இறால்மடி, நண்டு தொழில், தூண்டல் போன்ற பாரம்பரிய தொழில்களை செய்து வந்த 45 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்களது தொழில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் இங்கு தொழில் செய்ய வேண்டிய கடற்தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே அந்த இந்திய இழுவை படகுகளை வேறு இடத்திற்கு மாற்றி தமது தெழிலுக்கு ஏற்ற வகையில் ஏற்பாடு செய்து தருமாறு பல்வேறு தரப்புக்களிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அத்துடன், அண்மையில் பூநகரி பிரதேசத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்திலும் இந்த விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்ட போது, படகுகளை அகற்றி தருவதாக தீரமானம் எடுக்கப்பட்டது.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

SHARE