
பல ஆண்டுகளுக்கு மட்கிப் போகாமல், மண்ணுக்கும், நீர் நிலைகளுக்கும் பெரும் கேடுகளை விளைவிக்கக்கூடிய இந்த பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு மாற்றே கிடையாதா? உண்டு என்கிறது சூஸ் வாட்டர். சூஸ் வாட்டர் வடிவமைத்துள்ள குடிநீர் பாட்டில்கள் முழுவதும் காகிதத்தால் ஆனவை.
குடிநீரை இதில் அடைத்து வினியோகித்தாலும், நீரின் தன்மை கெடாது. இதை காலி செய்து குப்பையில் போட்டால், சில மாதங்களில் மட்கி மண்ணாகிவிடும்.
குப்பை மேடுகளில் சூஸ் வாட்டரின் பாட்டில்கள் சேர்ந்தால், அந்த குப்பைகளில் உள்ள நச்சுத் தன்மையை குறைக்கவும் செய்கிறது என்கின்றனர். இதை வடிவமைத்தவர்கள். கடலில் இந்த பாட்டில்கள் சேர்ந்தாலும் கூட கடல் உயிரிகளுக்கு சத்துள்ளதாக இருக்கும்.
மறுசுழற்சி செய்த காகிதத்தில் தயாராகும் இந்த பாட்டில்களின் உட்பகுதியில், சில தாவரங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருள் பூசப்பட்டிருக்கும். எனவே நீரில் காகிதம் ஊறி, பாட்டில் பிய்ந்துவிடாது.
சூஸ் வாட்டர் பாட்டில்களின் விற்பனையில் கிடைக்கும் லாபம் அனைத்தும் வாட்டர் பார் ஆப்ரிக்கா என்ற அமைப்புக்கு நன்கொடையாக அனுப்பப்படும். இன்று குடிநீர் தட்டுப்பாடுள்ள குடிசைப் பகுதிகளுக்கு, பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலமே அதிகம் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. அப்பகுதிகளில் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடுகளை தடுக்க சூஸ் வாட்டரின் காகித பாட்டில்கள் உதவும்.