செட்டிகுளம் வைத்தியசாலையில் வைத்தியர் இல்லாமையால் மக்கள் அவதி

154
வவுனியா செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் அவதியுற்று வருகின்றனர்.
குறித்த வைத்தியசாலையில் இன்று (30) வைத்தியர் பற்றாக்குறை காரணமாக 500 க்கும் அதிகமான நோயாளிகள் காத்திருந்த அவல நிலைமை காணப்பட்டது.
  
செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் 13 வைத்தியர்களுக்கான நியமனம் (காடர்) இருக்கின்ற போதும் 9 வைத்தியர்கள் மாத்திரமே கடமையாற்றி வருகின்றனர். அந்தவகையில் இன்றையதினம் மூன்று வைத்தியர்கள் மேலதிக பயிற்சிக்காக கொழும்பு சென்றுவிட்ட நிலையில் ஆறு வைத்தியர்கள் நோயாளிகளை பார்வையிட முடியாமல் திண்டாடியதை காணக்கூடியதாக இருந்தது.
200 க்கும் அதிகமான நோயாளிகள் செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையிலும் குறித்த வைத்தியசாலையை நம்பி செட்டிக்குளம் பிரதேச மக்கள், மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட மடு பிரதேசத்தை சேர்ந்த மக்கள் மற்றும் மதவாச்சி பிரதேசத்திற்குட்பட்ட சில எல்லை கிராமங்களை சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் வைத்தியர் பற்றாக்குறை காரணமாக மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
செட்டிக்குளம் வைத்தியசாலையில் பிண அறை கட்டி முடிக்கப்பட்டுள்ள போதிலும் இறந்த உடல்களை பாதுகாப்பதற்கான குளிரூட்டி வசதிகள் செய்யப்படவில்லை என மக்கள் விசனம் வெளியிட்டனர்
SHARE