(மட்டக்களப்பு மாநகர முதல்வர் – தி.சரவணபவான்)
அனைத்து அரசுகளும் நீதி அனைவருக்கும் சமமானது என்று சட்டத்தை வரைந்தாலும் நடைமுறையில் வடக்கு கிழக்கு மக்களுக்கான நீதி பாராமுகமாகவே இருக்கின்றது என மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தியாகராஜா சரவணபவான் தெரிவித்தார்.
இன்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் நடேசனின் 14 ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறு நினைவு தினங்களைக் கொண்டாடுவதோடு எமது செயற்பாடு நிறைவடைகிறதோ என்றே எண்ணத் தோணுகிறது. ஏனெனில் இந்த நாட்டில் நீதி, நியாயம் என்பது அனைவருக்குமானது என்று சொல்லப்படுகின்றது. இருப்பினும், எமது வடக்கு கிழக்கில் கொல்லப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனைய படுகொலைகளுக்குரிய விசாரணைகள் இதுவரை ஆரம்பித்ததாகத் தெரியவில்லை.
ஆட்சியில் இருக்கும் அனைத்து அரசுகளும் நீதி அனைவருக்கும் சமமானது என்று சட்டத்தை வரைந்தாலும் நடைமுறையில் வடக்கு கிழக்கு மக்களுக்கான நீதி பாராமுகமாகவே இருக்கின்றது.
எனவே நல்லாட்சி என்று சொல்லுகின்ற இந்த அரசு நியாயமான விசாரணைகளை ஆரம்பித்து இவ்வாறான கொலைகளுக்கான சூத்திரதாரிகளைக் கண்டபிடிக்க வேண்டும் என்பதோடு, அண்மையில் யாழ்ப்பாண ஊடகவியலாளர் மீதான தாக்குதாலுக்கும் நீதியான விசாரணை நடாத்தப்பட வேண்டும். அத்துடன் இனிமேலும் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறாமல் இருப்பதற்கு நீதியை அனைத்து மக்களுக்கும் உரியதாக வழங்க இந்த அரசு முன்வரவேண்டும் என்று தெரிவித்தார்.