தமிழகம் – தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தை பலரும் கொச்சைப்படுத்த முயற்சிப்பதாக புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி. கா. செந்திவேல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தென்னிந்திய நடிகர் ரஜினிகாந்த் இந்த போராட்டத்தை மிகக் கேவலமாக கொச்சைப்படுத்தியிருப்பதாக அவர் ஆவேசமாக கருத்து வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தின் போது 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர்களும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குறித்த சம்பவத்திற்கு எதிராக யாழிலுள்ள இந்திய துணைத்தூதரகம் முன்பாக இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர், “நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி மக்களின் போராட்டத்தை மிகவும் கேவலமாகக் கொச்சைப்படுத்தியுள்ளார்.
மக்கள் எதிர்ப்பு வெளியிட்டதன் காரணமாகவே பொலிஸார் துப்பாக்கிச் சூட்டை நடாத்தியதாக தெரிவித்துப் பொலிஸார் நடாத்திய துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டிலும், உலகமெல்லாம் பரந்து வாழும் தமிழ்மக்களின் பணத்தையெல்லாம் தன்னுடைய நடிப்பால் சூறையாடி கோடீஸ்வரராக இருந்து கொண்டு வேதாந்த போன்ற கம்பனிகளுக்கு, வக்காலத்து வாங்கும் கேவலமான வேலையை ரஜினிகாந்த் செய்து கொண்டிருக்கின்றார்.
இந்நிலையில், ரஜினிக்கு தமிழ்நாட்டு மக்கள் தகுந்த பாடம் படிப்பிக்க வேண்டும். எங்களது நாட்டிலும், ரஜினிகாந் போன்ற பெரு முதலாளி அருவருடிகளுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்தும் குரல் கொடுப்போம்” என தெரிவித்துள்ளார்.