இலங்கையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மஞ்சள் காமாலை நோய் பரவும் அபாயம் உள்ளதாக தொற்றுநோய் தொடர்பான சுகாதார கல்வி மற்றும் மேம்படுத்தல் பிரிவு பணிப்பாளர் வைத்திய கலாநிதி பபா பலிஹவர்த்தன மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சேறு நிறைந்த நிலங்களில் நிற்பதை பொதுமக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நோய்க்கான அறிகுறிகளான தலைவலி, காய்ச்சல், மூட்டு வலி என்பன தென்பட்டால் உடனடியாக அரச மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளுமாறு வைத்தியர் பபா பலிஹவர்த்தன பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.
முக்கியமாக கால்களில் காயங்கள் உள்ளவர்கள் இதனை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தென்னிலங்கையில் வைரஸ் காய்ச்சல் தீவிரமடைந்திருந்த நிலையில், இது நாட்டின் மற்றைய பகுதிகளுக்கும் பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் தற்பொழுது மஞ்சள் காமாலை நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.