யுத்தத்தில் வடக்கு வென்றதா ? தெற்கு வென்றதா ? என்பதல்ல பிரச்சினை ! இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் இஸதீன்லத்தீப்

178

சமுக நல்லிணக்கம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அகம் நிறுவனமும் இணைந்து கல்முனை பிராந்திய பணிமனையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.

  

மேலும் கருத்துரைக்கையில், உரிமைகளுக்காக போராடிய இறுதி யுத்தத்தில் வடக்கு வென்றதா தெற்கு வென்றதா? என்பதல்ல பிரச்சினை. எத்தனை மனங்களை வென்றுள்ளார்கள் என்பதே பிரச்சினை.

யுத்தத்தில் உறவுகளை இழந்தோர் நினைவேந்தல்களை நடாத்துவதென்பது அவர்களது அடிப்படை உரிமையாகும். அதில் பிரச்சினையில்லை. நாம் கூட இப்பிராந்தியத்தில் உறவுகளை இழந்தோருக்காக சமுக நல்லிணக்க நினைவேந்தலை செய்யவேண்டும்.

நல்லிணக்க அரசாங்கம் நல்லிணக்கத்தை முடியுமானவரை அமுல்படுத்தி வருகின்ற வேளை ஒரு
பக்கம் எதிரான செயற்பாடுகளும் தொடரத்தான் செய்கின்றன. அதற்கு சில அரசியல்வாதிகளும் துணைபோகின்றனர். அது கவலைக்குரிய விடயம்

காணாமல் போன உறவுகளையிட்டு சற்று சிந்தித்துப்பாருங்கள். அவர்களது குடும்பநிலை இன்று கேள்விக் குறியாகியுள்ளது. பெண்தலைமைத்துவக் குடும்பங்களின் நிலை பரிதாபகரமாகவுள்ளது.

இதையிட்டு பலரும் கவனம் செலுத்த வேண்டும். இன்று பலரும்
சிவில் அரசியல் உரிமைகளைப் பற்றிப் பேசுகின்றனர். ஆனால் அவர்களது சமுக பொருளாதார கலாசார உரிமைகளையிட்டு பெரிதாகப் பேசுவதில்லை.

இத்தகைய கூட்டங்களுக்கு கலாசார அலுவலர்கள் அழைக்கப்பட்டாலும் அவர்கள் வருவதில்லை. அரச அதிபருடன் பேசவிருக்கின்றேன். சமய தலங்களுக்கு பொருட்கள் வழங்குவது மட்டும் அவர்களது
தொழிலல்ல. மாறாக இனங்கள் மத்தியில் புரிந்துணர்வை கலாசார ஒற்றுமையை ஏற்படுத்தவும் வேண்டும். என அவர் உரையாற்றியிருந்தார்

இக்கலந்துரையாடலின் போது சகவாழ்வு மொழி அமுலாக்கல் அமைச்சின்
அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கே.பிரதீஸ்கரன்  சிவில் சமுகப் பிரதிநிதிகள் சமாதான அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE