(முன்னாள் கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர் – இந்திரகுமார் பிரசன்னா)
எமது மக்களுக்காகக் குரல் கொடுக்கின்ற ஊடகவியலாளர்களுக்கு இன்னல்கள் ஏதும் ஏற்பட்டால் அதற்கெதிராக நாங்கள் எப்போதும் குரல்கொடுப்போம். இந்த நல்லாட்சியும் மஹிந்த ஆட்சியைப் போன்று ஊடகவியலாளர்களுக்கு எற்படும் அநீதிகளை தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றதா? என கிழக்கு மாகாண முன்னாள் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்தார்.
இடம்பெற்ற ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் நடேசனின் 14 ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஆட்சியில் எமது ஊடகவியலாளர்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டும், கொலைகளுக்கு உள்ளாக்கப்பட்டும் இருந்தார்கள். நாட்டுப்பற்றாளர் நடேசன் இந்த ஊடகத்துறை மூலம் பல்வேறு சேவைகளை எமது மக்களுக்குச் செய்திருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திலும் அவருக்கு பாரிய பங்குண்டு. அவர் இந்த மண்ணிற்காகச் செய்த தியாகங்களை நாங்கள் மறந்துவிடக் கூடாது.
எமது மக்களுக்காகக் குரல் கொடுக்கின்ற ஊடகவியலாளர்களுக்கு இன்னல்கள் ஏதும் ஏற்பட்டால் அதற்கெதிராக நாங்கள் எப்போதும் குரல்கொடுப்போம். யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகளை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்த நல்லாட்சியும் மஹிந்த ஆட்சியைப் போன்று ஊடகவியலாளர்களுக்கு எற்படும் அநீதிகளை தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றதா? அவ்வாறில்லாமல் கடந்த காலத்தில் படுகொலை செய்யப்பட்ட எமது தேசத்தின் ஊடகவியளார்கள் அனைவருக்கும் நீதியான நியாயங்களைப் பெற்றுத் தர வேண்டும் என்று தெரிவித்தார்.