பிரதி சபாநாயகர் பதவி தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன்

218

பிரதி சபாநாயகர் பதவி தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடு குறித்து சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் கருத்து வெளியிட்டுள்ளார்.

இது குறித்து தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர்,

“48 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழர் ஒருவர் பிரதி சபாநாயகராக வருவதற்கு எதிராக கடுமையாக உழைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு தமது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.”

சுதந்திர கட்சி ஏற்கனவே பிரதி சபாநாயகர் பதவிக்கு பிரேரித்த தம்மை, அந்த பதவிக்கு நியமிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமது உரையில் குறிப்பிட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் தீர்விற்காக நேர்மையாக உழைத்திருந்தால், தற்போது தமிழ் மக்களின் கைகளில் தீர்வு கிடைத்திருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகராக ஐக்கிய தேசியக் கட்சியின் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறி நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE